இயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார், கோவை சரளா, சங்கிலி முருகன் உட்பட பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘பலே வெள்ளையத் தேவா’.
நடிகர் சசிகுமார் படித்து முடித்துவிட்டு அரசாங்க வேலைக்காக காத்துக்கொண்டிருக்கிறார். சசிகுமாரின் அம்மா ரோகினி போஸ்ட் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். அவருக்கு மதுரையில் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு பணி மாற்றம் வருகிறது.
அங்கு சசிகுமாருடன் கோவை சரளா, சங்கிலி முருகனின் வீட்டிற்கு குடியேறுகிறார் ரோகிணி. வந்த இடத்தில் தன்யா மீது காதல் வருகிறது. அதே நேரத்தில் அந்த ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் வளவனிடம் சசிகுமாருக்கு பிரச்சனை வருகிறது.
அந்த பிரச்சனையினால் சசிகுமார் ஜெயிலுக்குச் செல்கிறார். சசிகுமார் எதிபார்த்துக் கொண்டிருந்த அரசாங்க வேலை கிடக்காமல் போகிறது.
பின்னர், ஜெயிலில் இருந்து வெளியே வரும் சசிகுமார், விவசாயம் செய்யப்போவதாக தனது அம்மாவை சமாதானப்படுத்துகிறார். இதற்கிடையில், தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய பாலாசிங்கை தனது பாணியில் எப்படி வீழ்த்துவது என்று திட்டம் போடுகிறார். இறுதியில், அவரை எப்படி பழிவாங்கினார்? நாயகனும், நாயகியும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.
பொதுவாக சசிகுமார் நடிக்கும் கதை எல்லாம் அனைவரும் பார்க்கும் வகையில் அமைந்திருக்கும். இப்படத்திலும் அப்படித்தான் அமைந்திருக்கிறது. சசிகுமாருக்கு ஏற்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
நாயகி தான்யா, பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி. பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பு அழகாகத்தான் இருக்கிறது. தாத்தா பேரை காப்பாத்தியுள்ளார்.
கோவை சரளா மற்றும் சங்கிலி முருகன் காமெடி கொஞ்சம் சொதப்பல் தான். செல்ஃபி காத்தாயி கோவை சரளா படமுழுக்க செல்ஃபி எடுக்கும் இவரது நடிப்பு செயற்கையாக இருப்பதுபோல் தெரிகிறது.
நடிகை ரோகினி பொறுப்பான அம்மாவாக வந்து தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
வில்லனாக வரும் வளவனும் தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளார்.
ஒரு கிராமத்து கதையில் காதல், காமெடி, பகை என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் சோலை பிரகாஷ். ஆனால், படத்தில் காமெடி என்று எதிர்பார்த்து சென்றவர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
மதுரை மற்றும் தேனியின் கிராமத்து அழகை அற்புதமாக பதிவு செய்துள்ளது ரவீந்திரநாத்தின் கேமரா. இவருடைய ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் பெரிதளவில் மனதில் பதியாவிட்டாலும், பின்னணி இசையில் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘பலே வெள்ளையத் தேவா’ ஒரு முறை பார்க்கலாம்.