ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி பிரம்மாண்டமாக எழுந்துள்ளது. ஜெ., வின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா, தானே அடுத்த பொதுச்செயலாளராக வர முயற்சி எடுத்து வருகிறார். இதற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஆதரவளித்திருக்கிறார்கள். அதே நேரம், அடிமட்ட தொண்டர்களிடையே சசிகலா மீது அதிருப்தி இருப்பதையும் உணர முடிகிறது.
தமிழகம் முழுதும் பரவலாக சசிகலா ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களில், சசிகலா படம் மட்டும் கிழிக்கப்பட்டது. போயஸ் கார்டன் வரும் தொண்டர்களில் சிலர் சசிகலா மீது அதிருப்தி கொண்டு பேசுவதையும் காணமுடிகிறது. சில தொண்டர்கள், “ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்” என்று முழக்கமிடுவதோடு, சசிகலாவுக்கு எதிராகவும் கோசம் இடுகிறார்கள்.
இந்த நிலையில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும். சசிகலா பொதுச் செயலாளர் ஆக ஆதரவு தெரிவித்தார். ஆனால் அவருக்கும் சசிகலாவுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பாஜக அரசின் கண்ணசைவில் ஓ.பி.எஸ். செயல்படுவதாக ஒரு பேச்சு உலவுகிறது. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, சசிகலா முக்கிய பொறுப்புகளுக்கு வருவதை விரும்பவில்லை என்றும், ஓ.பி.எஸ். மூலம் மறைமுகமாக தமிழகத்தில் ஆட்சி செய்ய விரும்பவதாகவும் பேசப்படுகிறது.
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராமமனோகர்ராவ் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உட்பட பல இடங்களில் வருமானவரி சோதனை நடந்தது. இதில் கணக்கில் வராத பணம், தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும், பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியானது.
சசிகலாவின் குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்பு உள்ளவர் ராவ் என்றும், அவர் மீதான நடவடிக்கை சசிகலாவுக்கு விடப்பட்ட எச்சரிக்கை என்றும் சொல்லப்படுகிறது.
அதை உறுதிப்படுத்துவதுபோல, மத்திய அரசின் இந்த நடவடிக்கை அ.தி.மு.க.வை அச்சுறுத்தும் செயல் என்று அக் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் காட்டமாக தெரிவித்தார்.
அதே நேரம், இந்த நடவடிக்கை குறித்து முதல்வர் ஓ.பி.எஸ். கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையி்ல் இன்று மாலை, அ.தி.மு.க. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, வரும் டிசம்பர் 29 அன்று பொதுக்குழு, மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் நடக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் 2770 பேர், செயற்குழு உறுப்பினர்கள் 280 பேருக்குமான அழைப்பிதழ்கள், மா.செ.க்களிடம் அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆகவே பொதுக்குழு செயற்குழு கூடும் டிசம்பர் 29 அன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது. அன்று சசிகலாவே, பொ.செ.வாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கட்சியில் தொடரந்து ஐந்து வருடங்கள் உறுப்பினராக இருப்பவரே பொ.செ. வாக ஆக முடியும் என்ற அ.தி.மு.க.வின் விதி, தற்போது சசிகலாவுக்கு எதிராக இருக்கிறது. அவர் கடந்த 2012 முதல்தான் உறுப்பினராக இருக்கிறார். அதற்கு முன் நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டார்.
இந்த விதி, அந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் மாற்றப்படலாம். அதற்கு செ.கு., பொ.கு. உறுப்பினர்கள் 3050 ஆதரவு அளிக்க வேண்டும். ஆக இவர்கள் கையில்தான் தற்போது அதிமுக, சசிகலா விதி இருக்கின்றன.