சென்னை,
அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி ஜனவரி 3ந்தேதி மதுரை அலங்காநல்லூரில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், மத்திய அரசும், மாநில அரசும் வரும் ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று உறுதி அளித்தனர்.
மத்திய அமைச்சர்களும் கண்டிப்பாக போட்டி நடத்த ஆவன செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர்.
ஆனால், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சுப்ரீம் கோர்ட்டு மீண்டும், மீண்டும் தடை விதித்துள்ள நிலையில், இந்த ஆண்டாவது (அதாவது அடுத்த மாதம்) ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது..
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில்,
இந்த ஆண்டிலாவது ஜல்லிக்கட்டு விளையாட்டினை தமிழகத்தில் நடத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்ள,
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் வருகிற 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் தி.மு.க.வின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று கழக பொதுச் செயலாளர் பேராசிரியருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும், பொது அமைப்புகளைச் சார்ந்தோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
கழக உடன்பிறப்புகளும் என்னுடைய தலைமையிலே நடைபெறும் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்