
சென்னை,
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து மக்களின் துயரம் இன்றுவரை தொடர்ந்துகொண்டே உள்ளது. ஒவ்வொரு ஏடிஎம் வாசலிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த மாதம் 8ந்தேதி பிரதமர் மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தை தொடர்ந்து மக்கள் புதிய பணத்தை பெறவும், அன்றாட செலவுக்கு தேவையான பணத்திற்கும் அல்லல்பட்டு வருகின்றனர்.
பண அறிவிப்பு செய்து ஒரு மாதத்திற்குமேலாகியும் நாட்டில் பணப்புழக்கம் சரியாகவில்லை.
நாடு முழுவதும் பொதுமக்கள் பணத்திற்காக வங்கிகளின் வாசலிலும், ஏடிஎம் இயந்திரங்கள் முன்பும் வரிசை கட்டி நின்று வருகிறார்கள்.
பொதுமக்களுக்கு கொடுக்கும் அளவுக்கு தேவையான பணம் இல்லை என்று வங்கி நிர்வாகம் கூறி வருகிறது.
அதேபோல் பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்கள் தொடர்ந்து மூடப்பட்டே உள்ளது.

இயங்கும் ஒரு சில ஏடிஎம் இயந்திரங்களிலும், குறைந்த அளவே பணம் வைக்கப்படுவதால், ஓரிரு மணி நேரத்தில் பணம் முடிவடைந்து, மீண்டும் மூடப்பட்டே வருகிறது.
பொதுமக்கள் எந்த ஏடிஎம்-ல் உள்ளது என்று தேடித் தேடி நாயாய் அலைகிறார்கள். ஏதாவது ஒரு ஏடிஎம்-ல் பணம் இருப்பது தெரியவந்தால் அங்கே மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதன் காரணமாக மக்களின் அவலம் இன்றுவரை தொடர்ந்தே வருகிறது.
இன்று காலை சென்னை சேலையூரில் உள்ள ஒரு ஏடிஎம் இயந்திர வாசலில் குவிந்துள்ள மக்கள் கூட்டம் இதற்கு ஒரு உதாரணமாக கொள்ளலாம்.
வாரத்தின் 5 நாட்கள் கடுமையாக உழைத்துவிட்டு, விடுமுறை தினமான இன்றாவது ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தால், இந்த பணப்பிரச்சினையால், பணம் உள்ள ஏடிஎம்-களை தேடி அலைவதற்கே நேரம் சரியாகி விடுகிறது என்றார் ஏடிஎம்வாசலில் வரிசையில் நின்ற தனியார் நிறுவன ஊழியர் சேகர்.
பணத்திற்காக மக்கள் படும் கஷ்டம் மத்திய அரசுக்கு தெரியாதா….. என்று தணியும் இந்த பணப் பிரச்சினை.
Patrikai.com official YouTube Channel