நெல்லை :
“மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இது குறித்து நீதிமன்றம் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும்” என்று சுப.உதயகுமாரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சனை திரைப்பட இயக்கம், தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம், தெற்குக் கடைவீதி இலக்கிய வட்டம் ஆகியவை இணைந்து நெல்லையில் சே குவேரா படங்களின் திரைப்பட விழா மற்றும் மார்க்சிய – லெனினிய சிந்தனையாளர் சங்கர் நினைவேந்தல் ஆகிய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிகழ்வில், எழுத்தாளர் பாமரன், பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் சுப.உதயகுமாரன், குறும்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன், இலக்கியவாதி கரிகாலன், மார்சிய லெனினியவாதி ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.
சுப.உதயகுமாரன் பேசும்போது, ‘‘தற்போது தமிழக மக்கள் அடக்குமுறைகள் பற்றியோ பிறருக்கு நிகழும் அவலங்கள் குறித்தோ எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்கின்றனர். . சக மனிதர்கள் மீது எந்த அக்கறையும் இல்லாத சமூகம் உருவாகி வருகிறது. இது மிகவும் கவலை அளிக்கிறது.
தற்போது, சாவதில் கூட உரிமை வேண்டும் என்று கேட்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மானத்தோடும் கண்ணியத்தோடும் உற்றார், உறவினர்கள் சூழ்ந்து இருக்க மரணம் நிகழ வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பு.
ஆனால், ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவரையே ஒரு கூட்டம் 75 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்து விட்டு, திடீரென இறந்ததாக அறிவித்திருக்கிறது. அதனால் அந்த மரணம் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரைப் பார்க்கச் சென்றவர்கள், உள்ளே சென்ற சில நிமிடங்களில் திருப்பி அனுப்பப்பட்டனர். எட்டு கோடி மக்களால் அவரைப் பார்க்க முடியவில்லை. அவரது புகைப்படத்தைக் கூட பார்க்க முடியவில்லை.
ஆனால், முன்னாள் முதல்வரின் மனைவியால் அந்த மருத்துவமனைக்குள் ஒன்றரை மணி நேரம் இருந்து ஆலோசனை நடத்த முடிகிறது. அதனால், தமிழகத்தின் நலன் கருதி பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த அமைப்புகளும் இயக்கங்களும் ஒன்றிணைந்து கூட்டுத் தலைமையாக செயல்பட முன்வர வேண்டும்’’ என்று சுப. உதயகுமாரன் பேசினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை 75 நாட்களாக யாருக்கும் காட்டாமல் ஒரு கூட்டம் மறைத்து வைத்து விட்டு, திடீரென மரணம் அடைந்ததாக கூறுவது ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ளத்தக்க செயல் அல்ல. அதனால் அவரது மரணத்தில் சந்தேகம் வலுத்து வருகிறது. அதனால் இது தொடர்பாக நீதிமன்றமே தானாக முன்வந்து இது குறித்து விசாரித்து உண்மையை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை தனிநபர்களோ அல்லது ஒரு சிலரோ அனுபவிக்கக் கூடாது. அந்தச் சொத்துக்களை கொண்டு, அவரது பெயரிலேயே அறக்கட்டளை அமைத்து அதனை ஏழை, எளிய மக்களின் கல்வி வளர்ச்சிக்கு கல்வி உதவிக்கு பயன்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும்’’ என்று சுப. உதயகுமாரன் தெரிவித்தார்.