சென்னை:
தமிழக அரசு மீது மத்திய பாஜக அரசு மறைமுக அதிகாரம் செலுத்துவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட கால சிகிச்சை பலனளிக்காமல் கடந்த டிசம்பர் 5ம் தேதி மறைந்தார்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே, தமிழக அரசை, அமைச்சர்களை, மத்திய பாஜக அரசு ஆட்டுவிக்கிறது என்ற யூகச் செய்திகள் பரவின. குறிப்பாக ஜெயலலிதா மறைந்தபிறகு இந்த யூகச் செய்திகள் அதிகரித்திருக்கின்றன.
இது குறித்து இதுவரை பதில் அளிக்காமல் இருந்த பாஜக இன்று தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் தலைவர், தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:
“தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய பா.ஜ.க. அரசு, நேர்மையாக, நேர்மறையாக செய்யும்.
ஆனால் சிலர், மத்திய பாஜக ஆட்சி தனது அதிகாரத்தை மாநில அ.தி.மு.க..அரசு மீது திணிப்பது போலவும், புற வாசல் வழியே இங்கே ஆட்சி அமைக்க விரும்புவது போலவும் யூகச் செய்திகளை பரப்பி வருகின்றன.
பா.ஜ.க. கட்சி ஜனநாயக அடிப்படையில் செயல்படக்கூடியது. பா.ஜ.க. அரசு, சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிக்கக்க கூடியது. ஆகவே தவறான வழியில் நாங்கள் செயல்படுகிறோம் என்று நினைக்க வேண்டிய அவசியமே இல்லை.
ஜனநாயகம் அனுமதிக்கும் வழிகளில் நாங்கள் எங்கள் கட்சியை தமிழகத்தில் வளர்த்தெடுக்க முயல்கிறோம். அதில் வெற்றியும் பெறுவோம்”
இவ்வாறு தமிழிசை கூறினார்.