“அதிமுகவில் எதுவும் பிரச்னை வந்தால் அதனை வைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று சிலர் கனவு கண்டு கொண்டுள்ளார்கள்” என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்போலோ மருத்துவமனை வந்த மதிமுக தலைவர் வைகோ, “உடல்நலம் தேறி வந்த நிலையில் அவரால் பேச முடிந்தது. இது உண்மை. கையெழுத்தும் போட்டார்கள். அது உண்மை தானா என்று சிலர் கொச்சைப்படுத்தினார்கள். தொலைக்காட்சியும் பார்த்தார்கள்.
முழுமையாகக் குணம் பெற்ற அவர் எதிர்பாரா விதத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன வைத்தியம் செய்ய முடியுமோ அந்த உயர்ந்த வைத்தியத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சகோதரி ஜெயலலிதா மிகுந்த தைரியம் கொண்டவர். எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவிலிருந்து மீண்டு வந்ததைப் போல இவரும் தொடக்கத்தில் ஏற்பட்ட பிரச்னையிலிருந்து மீண்டு வந்தார்.
தமிழகத்தின் நன்மைக்காக, வாழ்வாதாரத்திற்காக அவர் மீண்டு, பிழைத்து வர வேண்டும். நான் இயற்கை அன்னையினை பிரார்த்திக்கிறேன். தமிழர்களின் வரலாற்றில் அவரது சாதனைகள் ஆயிரமாயிரமாண்டுகளுக்கு பேசப்படும்.
அதிமுகவில் எதுவும் பிரச்னை வந்தால் அதனை வைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று சிலர் கனவு கண்டு கொண்டுள்ளார்கள். அது ஒரு போதும் நடக்காது. முதல்வர் நலம் பெற்று திரும்புவார்” என்று வைகோ தெரிவித்தார்.