ஹவானா :
கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அந்நாட்டின் தலைநகர் ஹவானாவில் நேற்று மாபெரும் அமைதிப் பேரணி நடைபெற்றது.
கியூபாவில், மாபெரும் மக்கள் புரட்சியின் மூலம் அந்நாட்டின் ராணுவ சர்வாதிகாரத்தை முறியடித்து புதிய அரசை நிறுவியவர் பிடல் காஸ்ட்ரோ. பொதுவுடைமை தத்துவத்தின் அடிப்படையில் ஆட்சி புரிந்து, உலகின் கவனத்தை ஒட்டு மொத்தமாக ஈர்த்த காஸ்ட்ரோ, தனது 90-வது வயதில் கடந்த 25ந்தேதி முதுமை காரணமாக காலமானார்.
இதனையடுத்து, கியூபாவில் 9 நாள் அரசுமுறை துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கியூபாவில், தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள், சந்தைப் பகுதிகளில் விற்பனை நடைபெறவில்லை. மேலும், பல்வேறு நகரங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளன. கியூபாவில் உள்ள மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நாளன்று லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து பிடல் காஸ்ட்ரோவின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் காரணமாக தலைநகர் ஹவானாவில் உள்ள புரட்சி சதுக்கத்தில், நேற்று, மாபெரும் அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பேரணி நடைபெற்றது. அதில் பிடல் காஸ்ட்ரோ மற்றும் மற்ற புரட்சிகர தலைவர்களின் போராட்டங்களை விளக்கும் பழைய படங்கள் காட்சிப்படுத்தப்பட்டும், கியூபாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டும் இந்த பேரணி தொடங்கியது.
வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் பொலிவியா அதிபர் ஈவோ மொராலெஸ் ஆகியோர் உள்ளிட்ட உலக மற்றும் பிராந்திய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணிக்காக ஹவானாவில் உள்ள புரட்சி சதுக்கத்தில் பல ஆயிரக்கணக்கான கியூபா மக்களுடன் இணைந்துள்ளனர்.
ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சிக்காலத்தில் கியூபாவில் நிலவிய சர்ச்சைக்குரிய அரசியல் மற்றும் மனித உரிமை செயல்பாடுகள் காரணமாக அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, பல மேலை நாடுகளும் தங்களின் கீழ் நிலை அதிகாரிகளையே கியூபாவுக்கு அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான, சாண்டியாகோவிலும் அமைதிப் பேரணி திட்டமிட்டபடி நடந்தது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதனிடையே, இந்தியாவிலும் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதேபோல் காஸ்ட்ரோவின் இறுதி சடங்கில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் குழுவினர் கியூபா சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.