சென்னை,
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.
தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ஆம்ஆத்மி கட்சிகள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
சென்னை ராஜாஜி சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் முன்பு மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டமும்,
அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகம் அருகில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டமும்,
மக்கள் நலக்கூட்டணியினர் (மதிமுக தவிர்த்து) மதுரையிலும்,
ஆம்ஆத்மி கட்சியினர் சென்னை ரிசர்வ் வங்கி அருகிலும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
அதுபோல் தமிழ்நாடு வணிகர்கள் சங்கமும் இன்று, மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கடை அடைப்பு நடத்துவதாக அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால், இன்று நடைபெறும் போராட்டத்தில் வணிகர்கள் சங்கம் கலந்துகொள்ளாது என்று வணிகர்கள் சங்க தலைவர் த.வெள்ளையன் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நவம்பர் 28-ந் தேதி கடையடைப்பு செய்வது என்று அறிவித்திருந்தது.
பல்வேறு காரணங்களால் இந்த கடையடைப்பு தற்காலிகமாக கைவிடப்படுகிறது என்பதையும் அடுத்த தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
டிசம்பர் 15-ந்தேதி அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய கடைவீதிகளில் கருப்புக் கொடி ஏற்றப்படும்
ஜனவரி 1 முதல் தேதி அன்று கருப்புக் கொடிகள் இறக்கப்பட்டு, ‘காந்தி தேசம் காப்போம்’ என்று உறுதிமொழி ஏற்கும் விதத்தில் அதே கம்பங்களில் தேசியக்கொடி ஏற்றப்படும்.
இன்று (28-ந்தேதி) இடதுசாரி அமைப்புகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் வணிகர்களும் பங்கேற்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பாரதியஜனதா கட்சியினர் மிரட்டல் எதிரொலியாக கடையடைப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
அதேபோல், வணிகர்கள் சங்க பேரமைப்பும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வது பற்றி எந்தவிதமான தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இன்று நடைபெறும் அனைத்து கட்சிகள் போராட்டத்தில் அதிமுகவும், மதிமுகவும் கலந்துகொள்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.