மன்னார்குடி:
ர்நாடகாவில் மேகதாது ஆற்றில் அணை கட்ட அடிக்கல் நாட்டப்படும்  என்று அம்மாநில நீர்பாசன துறை அமைச்சர் தெரிவித்துள்தற்கு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று மன்னார்குடியில் பத்திரிகையாளர் சந்திப்பில் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது:
00
’’தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், கடந்த  ஐந்தாண்டுகளாக குருவை சாகுபடி செய்ய முடியாத நிலையில் தவிக்கிறார்கள். இந்த ஆண்டு  சம்பா முற்றிலும் இழந்து வாழ வழியில்லாமல் தற்கொலை, அதிர்ச்சி மரணங்களும் தொடர்கின்றன.  இதுவரையில் 13பேர் இறந்துள்ளனர்.
இதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். காரணம்,  காவிரி மேலாண்மைவாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்திரவிட்ட நிலையில் மத்திய அரசு செயல்படுத்தாமல் இருக்கிறது.  தமிழக முதல்வரோடு நட்புனர்வு கொண்டிருந்த பிரதமர் மோடி, தமிழக முதல்வர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கர்நாடகாவுக்கு சாதகமாக நடந்துகொள்கிறார்.  பிரதமர் மோடி, தமிழக அரசுக்கும் மக்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டார் மேலும் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் துணை சபாநாயகர் தம்பித்துரை தலைமையில் பிரதமரை சந்திக்கசென்றபோது அனுமதி மறுத்து ஒட்டு மொத்த தமிழர்களையும் அவமதித்தார் பிரதமர் மோடி.
இதனால் இனி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காதோ இனி வாழவேமுடியாதோ என்ற அச்சநிலைக்கு  தள்ளப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசு தவறிவிட்டது.
இந்த நிலையில் காவிரியின் குறுக்கே ராசிமணல், மேகதாது அணைகட்ட வரும் ஜனவரி இரண்டாம் வாரம் அடிக்கல் நாட்டி 2030க்குள் கட்டி முடிக்கப்படும் என கர்நாடக நீர்ப்பாசணத்துறை அமைச்சர் எம்பி பாட்டீல் அறிவித்திருக்கிறார். இது  அதிர்ச்சியளிக்கிறது.
அந்த அணை கட்டப்பட்டால் தமிழகம் நீரின்றி அழிந்துபோகும். இந்த அணை அறிவிப்புக்கும்  மத்திய அரசு துணை போகிறதோ என்ற சந்தேகம் உள்ளது.
ஆகவே கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சியை தமிழகஅரசு உடனடியாக தடுத்து நிறுத்தி காவிரி மேலான்மை வாரியம், நீர்பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு அமைத்திட, அவசர நடவடிக்கை எடுக்க  வேண்டும், பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க  வேண்டும். முதலமைச்சர் எடுக்கும் நடவடிக்கை குறித்து விவசாயிககளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.