திரைக்கு வராத உண்மைகள்: 7 :
என் நண்பர் கதிரை துரை, நக்கீரன் ‘ பத்திரிகை குழுமத்தில் புகைப்படக்காரராக இருந்தார். நக்கீரன் தொடங்குவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே இவர் எனக்குப் பழக்கம். மயிலாடுதுறையை அடுத் கதிராமங்கலம் என்ற ஊர்க்காரர். அண்ணாத்துரை என்பது அவர் பெயர்.
ஊரும் பேரும் ஒன்றுக்கொன்று மோதி சிதைந்ததில் மிச்சம் மீதியாகத் தேறிய பெயர், கதிரை துரை.
புலனாய்வுப் பத்திரிக்கைகளுக்குப் பொருத்தமானவர். காற்றுப் புகாத இடத்திலும் நுழைந்து, ரகசியமாகப் படம் பிடித்து, எடுத்து வந்துவிடுவார்.
நக்கீரன் குழுமம் ‘ரஜினி ரசிகன்’ என்றொரு பத்திரிக்கையும் நடத்திவந்தது, முன்பு! அதன் ஆஸ்தான புகைப்படக்காராக இருந்த கதிரை, ரஜினிகாந்த் நடிக்கும் படப்பிடிப்புகளுக்குச் சென்று ரஜினி அணிந்துள்ள புதுமையான டிரஸ்ஸில் பலவித போஸ்களில் படம் எடுத்து வருவார்!
ரஜினிகாந்த் நடிக்கும் ‘வீரா’ படத்தின் படப்பிடிப்பு, சென்னை கிண்டியில் இருந்த ‘கேம்ப கோலா’ திடலில் நடந்து வந்தது. ‘ரஜினி ரசிகன்” இதழுக்காகப் படம் பிடிக்கப் போனார், கதிரை. ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஆச்சுதா? அது வரை பலவித போஸ் கொடுத்த ரஜினி, கதிரையைக் கூப்பிட்டு, “எடுக்க வேண்டிய படங்கள் எவ்வளவு வேணும்னாலும் இன்னைக்கே எடுத்துகோ! இதுக்கு அப்புறம் ஒரு மாசத்துக்கு என்கிட்டே வராதே! நான் படப்பிடிப்பில் ’பிஸி’ ஆயிடுவேன். அந்த நேரத்தில் வந்து போட்டோ எடுக்க என்னைத் தொந்தரவு பன்னக்கூடாது.’மூடு’ கெட்டுடும்….’’என்று கூறினார்.
‘’சரி.. இன்னும் ஒரு மாசத்துக்குப் பிறகுதான் உங்ககிட்டே வருவேன். அதுவரைக்கும் தொந்தரவு பண்ண மாடேன்’ ’என்று வாக்குறுதி அளித்தார் கதிரை.
ஆச்சுதா? கதிரை திரும்பிவிட்டார். மறுநாள். நக்கீரன் கோபாலின் தம்பி வந்தார். தம்பிக்கு ஒரு சினேகிதர். அந்த சினேகிதர், ரஜினியின் ரசிகர். ஊரிலிருந்து வந்திருக்கிறார்.
ரஜினியைப் பார்த்து கை குலுக்கி உடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவருக்கு கொள்ளை ஆசை.
நக்கீரன் அலுவலகத்தினர், அந்த ரசிக பெருமானிடம் , அங்கிருந்த சர்வ ரோக சஞ்சீவியான கதிரை துரையைக் காட்டி, “அவரைப் பிடி! ரஜினிக்கு தோஸ்த்! கூட்டிப் போவார்’’ என்றார்கள்… “செல்லும் செல்லாததற்கு செட்டியாரைக் கேள்” என்கிற கதையாக!
வந்த ரசிகர், சிந்துபாத் கிழவன் கணக்காக கதிரையின் தோளில் ஏறிக் கொண்டு, ‘’ரஜினியிடம் கூட்டிப்போ!’’ என்று அடம் பிடிக்க ஆரப்பித்து விட்டார்.
‘’தப்பீ! நேற்றுதான் ரஜினி சொன்னாரு, ’’இன்னும் ஒரு மாசத்துக்கு என் பக்கம் வராதே!’ அப்படீன்னு. அவரு ஒரு தடவை சொன்னா, ஒன்னுக்குப் பக்கத்திலே ஒரு நூரு சைபர் போட்டுக்கோ, அத்தனை தடவை சொன்ன மாதிரி!
அதனாலே, ரஜினியின் வீட்டு அட்ரஸ் சொல்றேன். நீயே போய் பாரு’’ என்று கழற்றி விடுகிற மாதிரி அவரிடம் பேசினார் கதிரை.
அந்த ரசிகரோ, கதிரையை விடவில்லை உமையொடு பாகன் போல கதிரையுடன் நீ பாதி நான் என்றாகி விட்டார். ’உன்னை விட மாட்டேன். உடனே புறப்பட்டு ரஜினியைப் பார்க்க!’ என்று ஒரே பிடிவாதம்.
வாதத்துக்கு மருந்து உண்டு பிடிவாதத்துக்கு? அவர அழைத்துக் கொண்டு தனது டூவிலரில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு குதிரை எனப் பறந்தார் கதிரை.
உச்சி வெயில்… மதிய சாப்பாட்டு வேளை நெருங்கும் நேரம். உலகில் இந்த வேளையில் எந்த மனிதனுமே டென்ஷனாக இருப்பார்கள், பசியின் காரணமாக. பொதுவாக எல்லா நேரமுமே டென்ஷனாக இருக்கும் ரஜினி, இந்த நேரத்தில் எப்படியிருப்பார்?
யோசிக்க வேண்டாமா கதிரை? வந்தவன் அதை யெல்லாம் யோசிக்க விட்டால் தானே?
படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குள் கதிரையின் பைக் நுழைந்தது. மரத்தடியில் ரஜினி அமர்ந்திருந்தார். கதிரை, வண்டியை ஸ்டாண்டு போட்டு விட்டு, ஒரு கையில் காமிரா, இன்னேருகையில் அந்த ரசிகர் சகிதமாக ரஜினியை நோக்கி இரண்டு எட்டு வைத்தார்.
அவ்வளவுதான்! அதைப் பார்த்த ரஜினி ஆவேசமாக எழுந்தார்…
கதிரையை நோக்கி, உரத்த குரலில், கையை ஓங்கியவாறே……… ‘’கண்ணா..கோபம் வந்தா என்னா பண்ணுவேன், தெரியுமா?” என்றபடி அவர் எச்சரிக்கும் தொணியில் சொல்ல…
மொத்த யூனியட்டுமே ஆடிப்போய்.. ரஜினியையும் , கதிரையையும் மாறி மாறிப் பார்த்தது. அதிர்ந்து போன கதிரை, படபடவென திரும்பி வந்து பைக்கை அவசரமாக திருப்பினார். கூடவே தன்னுடன் வந்தவரையும் ஏற்றிக் கொண்டார். ஸ்பீடா மீட்டரில் வேகத்தை காட்டும் முள்ளே, தெறித்து விழும் வேகத்தில் வண்டியை ஓட்டினார். டயர் தீப்பிடித்துக் கொள்ளாத குறைதான். வண்டி வந்து சேர்ந்தது, நக்கீரன் அலுவலகத்துக்கு.
படபடா, தடதடாவென படியேறி. மாடிக்குப் போய் தன்னை ஆசுவாசப்படுத்தி, இதயத்துடிப்பை நார்மலுக்குக் கொண்டு வரவே, அவருக்கு அரைமணி நேரமாகிவிட்டது.
சற்றுநேரத்தில் ‘போன்’’. அப்போதைய நாளில் செல்போன் நடைமுறைக்கு வரவில்லை. லேண்ட் லைன்தான்.
கதிரையை அழைத்தார். “கதிரை! உடனே இங்கே கேம்ப கோலே, படப்பிடிப்பு இடத்திற்கு வாருங்கள். ரஜினி உங்களை வரச்சொன்னார்” என்றார்.
‘’அவர் கோபமாக இருக்கிறார். உண்மையில் நான் அவரைப் படம் எடுக்க வரவில்லை, அவரது ரசிகர் ஒருவர், அவரைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்தார். அவருக்கு நான் வடம் பிடித்தேன் இழுத்து வந்தேன். வட கயிறு இப்போது என் கழுத்துக்கு சுறுக்குக் கயிறாக மாறிவிட்டது. கெட்ட நேரம்.. சட்டி சுட்டதடா கைவிட்டதடா!’’என்று தன்னிலை விளக்கத்தைத் தட்டுத்தடுமாறி வாசித்த கதிரை, ‘’ரசிகரை அழைச்சிட்டு நான் வந்தது தப்புதான்! பாம்புக்கு வாசிக்கிற மகுடிக்கு பக்க வாத்தியம் எதுக்கு?
அந்த யோசனை அப்போ வரலே! கூட்டிகிட்டு வந்துட்டேன்!’’ என்றார்.
‘’உங்களை மிரட்டி விரட்டியதால் ரஜினி ரொம்ப வருத்தத்தில் இருக்கிறார். சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கிறார். நீங்கள் வந்தபிறகு உங்களை சமாதானப் படுத்தினால்தான் அவருக்கு மனசு ஆறுதல் அடையும். சாப்பிடுவார். வாங்க உடனே!’’ என்றார் ஜெயராமன்.
“நான் ஒன்னும் வருத்தப்படலே, ஒருமாசத்துக்கு அவர் வராதேன்னு சொன்னபிறகும் நான் வந்தது தவறு. அனால், நான் அவரை போட்டோ எடுக்க வரவில்லை என்கிற உண்மையைமட்டும் அவரிடம் சொல்லிவிடுங்கள், போதும்!” என்றார் கதிரை,
மறுநாள் காலை. ரஜினியின் நண்பர் சத்யநாரயணா போனில் அழைத்தார். நக்கீரன் கோபாலை! கதிரையை அனுப்பும்படி கோரினார். கோபால் சொல்லவும், கதிரை போனார். முதல் நாள் கோபப்பட்டு பேசியதற்காக ரஜினி வருத்தம் தெரிவித்ததோடு, அன்றைய நாளில் அவர் அணிந்திருந்த ‘புதிய டிரஸ்ஸில் போஸ் கொடுத்து கதிரையை நிறைய படங்கள் எடுத்துக் கொள்ளச் சொன்னார். எடுத்தார் கதிரை.
அவை எல்லாம் ரஜினி ரசிகனில் வெளியாகி ரஜினி ரசிகர்களை மனம் மகிழச்செய்தன.
நடந்ததெல்லாம் நன்மைக்கே! என்று எண்ணிய கதிரை, இப்போதும் கூட மற்றவர்களிடம், ‘’ரஜினி எவ்வளவோ பெரிய ஆள். நானோ, சாதாரணம். என் பக்கத்துத் தெருக்காரனுக்கே என்னை யார் என்று தெரியாது.
இருப்பினும் என் மனது புண்பட்டுவிடக்கூடாதே என்று என்னை அழைத்து ஆற்றுப்படுத்தியதை நினைக்கும் போது அவரது பேருள்ளத்தை நினைத்து நெகிழ்ந்து போவேன்!’’ என்று சொல்வார்!
(தொடரும்)
ஆர்.சி.சம்பத் அலைபேசி எண்: 97907 52183