மறுபடி மழை கொட்ட ஆரம்பிக்க… வெளியில் செல்ல வேண்டிய புரோகிராம்களை கட் செய்துவிட்டு கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன். டீ பையன் சுடச்சுட போண்டாவும், ஆவி பறக்க மசாலா டீயும் கொண்டு வந்து வைக்க… விட்ட இடத்தில் இருந்து, “பொன்னியின் செல்வன்” நாவலை படிக்க ஆரம்பித்தேன்.
இரவு நேரத்தில் வனாந்திர காட்டுப்பகுதியில் இடிந்த பள்ளிப்படை வீடு. அங்கு சதிகாரர்கள் ஆலோசனையில் இருக்க.. ஒற்றன் ஆழ்வார்கடியான் மர உச்சியில் ஒளிந்துகொண்டு எட்டிப்பார்க்க… கோட்டான் கூவ…
பக்கென்று தோளிவல் கை ஒன்று வந்து விழுந்தது. திடுக்கிட்டு திரும்பினால், நண்பர் சுந்தர்!
“என்னப்பா, பொன்னியின் செல்வன் கதையில மூழ்கிட்டியா…” என்றார் சிரித்துக்கொண்டே.
“ஆமாம்பா.. சரித்திரத்தை தெரிஞ்சிக்கலாம்.. அதுவும் ஹீரோவா வாழ்ந்த ராஜராஜ சோழனை பத்தி” என்று இழுத்தேன்.
அடுத்த விநாடி, “கபகபகப”வென சிரிக்க ஆரம்பித்தார் சுந்தர்.
“ஏம்பா.. வில்லன் மாதிரி சிரிக்கிறே..” என்றேன் எரிச்சலாக. அதற்கு சுந்தர், “ராஜராஜ சோழன்தாம்பா வில்லன். அதுதான் வரலாற்றுபூர்வமான உண்மை!” என்றார்.
“என்னப்பா சொல்றே…” என்று நான் ஆச்சரியமாக பார்க்க, “முதல் விசயம், சேர, சோழ, பாண்டியர் யாரையுமே தமிழ் மக்கள் தங்களோட அரசர்களா ஏத்துக்கலை. அதுதான் உண்மை” என்று ஆரம்பித்தார் சுந்தர்.
நிறைய வரலாற்று ஆராய்ச்சிகள் செய்தவர், கல்வெட்டு எழுத்தக்களை படிக்கக்கூடியவர்.. ஆகவே அவர் சொல்லட்டும் என்று காத்திருந்தேன்.
சுந்தர் தொடர்ந்தார்:
“ஒரு புறம் வகைவகையாக தின்னுட்டு, அது செரிக்கலையேன்னு கசாயம் குடிச்சவனுங்களும், இன்னாரு பக்கம் ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாதவங்களுமாத்தான் தமிழ்நாடு இருந்துச்சு.
தமிழருங்க, ஒரு வேளை கஞ்சிக்காக தங்களையே வித்துக்குற நிலையிலதான் இருந்தாங்க.. அதுவும் பணக்காரதமிழன்கிட்டே!
தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளியிட்ட, “தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள்-2004” அப்படிங்கிற வெளியீட்டுல இது ஆதசாரத்தோட சொல்லப்பட்டிருக்கு.
இந்த அடிமைங்களும் பொருள் மாதிரித்தான். பேரம் பேசி விக்கலாம். இந்த அடிமைகளோட கணக்கெடுப்புக்காக ஆவணமே வச்சிருந்தாங்க. அதுக்கு பேரு “ஆள்விலை பிரமாண இசைவுத்தீட்டு”ன்னு பேரு. இந்த அடிமைங்க மேல, அடையாளத்துக்காக முத்திரை போடுவாங்க.. அதுவும் சூட்டுக்கோலால!
கோவில் அடிமைகளுக்கும், அரண்மனை அடிமைகளுக்கும் வித்தியாசம் தெரியணும்னு வேற வேற மாதிரி முத்திரை போடுவாங்க” அவர் சொல்லச் சொல்ல ஆச்சரியமாக கேட்டுக்கொண்டிருந்தேன்.
சுந்தரே தொடர்ந்தார்: “தமிழ்மக்கள் எல்லாருமே சேர, சோழ, பாண்டிய மன்னர்களை, ஏத்துக்கிட்டதில்லே. தங்களை அழிக்க வந்த விரோதிகளாத்தான் பார்த்தாங்க.
புறநாறூறு புத்தகத்தில 270 ஆம் பாடல் தொடங்கி 359 ஆம் பாடல் வரை உள்ள பல பாடல்கள் இதைத் தெரிவிக்குது.
“நேத்து வரைக்கும் எங்களை மாதிரி பழங்குடிகளாக இருந்த நீங்க, இப்போ திடீர்னு வம்ப வேந்தர்களாகி எங்களை அதிகாரம் செய்யப் பாக்கறீங்களா?”னு கேட்கிற பாடல்கள் அதில இருக்கு.
இந்த சேர, சோழ, பாண்டிய மன்னருங்க, தங்களை மற்ற தமிழர்களிடமிருந்து வேறுபடுத்தி.. அதாம்பா, உயர்வா காட்டுறதுக்காக நிறெய முயற்சி பண்ணாங்க. பார்ப்பனர்கள் உதவியோட, யாகங்கள் செஞ்சி, தங்களை ஆரியகுலம், சூரிய குலம்னு சொல்லிக்க ஆரம்பிச்சாங்க. சந்திரகுலம் என்றும் பல்வேறு சங்கப் பாடல்கள்ல, வேதம், வேள்வி எல்லாம் வர்ற இடத்தில இந்த தமிழ் மன்னர்கள் பெரும் வரும். இதை வச்சே புரிஞ்சிக்கலாம்.
அது மட்டுமில்ல… தமிழ்நாட்டை ஆண்ட இந்த சேர, சோழ, பாண்டியர் ஒருத்தனும் தங்களோட குருவாக ஒரு தமிழனை வச்சிக்கிடதே இல்லை. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் இந்தப் பார்ப்பனர்களுக்குத் தானமாக அளிச்சாங்க” – சுந்தர் சொல்லிக்கொண்டே போக… “அதெல்லாம் இருக்கட்டும்.. ராஜராஜசோழன்கூட அப்படித்தானா” என்றேன்.
என்னை ஏதோ எறும்பை பார்ப்பது போல பார்த்த சுந்தர், “சொல்றேன் கேளு… ராஜராஜ சோழன் என்ற மன்னன் இருந்தான்.. அவன்தான் பெரிய கோயிலை கட்டினான் அப்படிங்கிறதே பிற்காலத்துல தமிழர்களுக்கு தெரியாம போச்சு. காடுவெட்டி சோழன் என்பவன்தான் பெரிய கோயிலை கட்டினதா தமிழங்க நினைச்சுகிட்டிருந்தாங்க.
19ம் நூற்றாண்டு கடைசியில ஹூல்ஸ் அப்படிங்கிற ஆங்கிலேய இறுதிப்பகுதியில் அறிஞர்தான், தஞ்சை பெரிய கோவில்ல உள்ள கல்வெட்டுகளைப் படிச்சு, ராஜராஜன் அப்படிங்கிற மன்னன்தான் பெரிய கோயிலை கட்டினான்னு உண்மையை கண்டு பிடிச்சார்.
இந்த ராசராசன் இரண்டாம் பராந்தகனின் இரண்டாவது மகன். ஆவான். இவனோட அண்ணன் ஆதித்த கரிகாலன்தான் பட்டத்து இளவரசனா இருந்தவன். அவனை உடையார்குடி பார்ப்பனர்கள் சதி செஞ்சி கொலை பண்ணிடுறாங்க. ஆனா அவங்களுக்கு எந்த தண்டனையும் கொடுக்காம விட்டுர்றான் ராஜராஜன். ஏன்னா, பார்ப்பனர்களுக்கு தண்டனை கொடுத்தா பிரம்மஹத்தி தோஷம் பிடிச்சுக்கும்னு பயம். அவ்வளவு முட்டாளாத்தான் இருந்தான் ராஜராஜ சோழன்” என்று சுந்தர் சொல்ல.. நான் குறுக்கிட முயல.. சுந்தர் என்னை தடுத்தார்.
“இதுக்கு ஆதாரம் இருக்கானு கேப்பே… அவ்வளவுதானே.. உடையாளூர் கல்வெட்டு இது எல்லாமே இருக்கு” என்று சிரித்த சுந்தர், போண்டாவை எடுத்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் தொடர்ந்தார்:
“இப்போ சில பேரு தமிழன், ஆண்ட பரபம்பரை, வந்தேறி… இப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சிருக்காங்க.. ஆனஆ அப்படி பேசறவங்க ராஜராஜனை துதிபாடுறாங்க. அந்த ராஜராஜன் என்ன செஞ்சானஅனு சொல்றேன் கேளு…
ராஜராஜ சோழன் தன் மகள் குந்தவையை வேங்கி நாட்டு மன்னன் விமலாத்தித்தனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்தார். அதே மாதிரி, அவன் மகன் ராசேந்தர சோழன் தன்னுடைய மகள் அம்மங்கா தேவியை கீழைச் சாளுக்கிய மன்னன் முதலாம் ராஜராஜனுக்கு கல்யாணம் செஞ்சி கொடுத்தான்.
அதாவது இரண்டு மாப்பிள்ளைகளுமே தமிழங்க கிடையாது. அது மட்டுமில்ல… பிற்காலத்துல சோழ அரியணை ஏறிய முதலாம் குலோத்துங்கன் அம்மங்காதேவியின் பேரன்! அதாவது தமிழனுக்குப் பிறக்காதவன், தமிழ்ப்பகுதியின் மன்னன் ஆனான்” என்று சொல்லி முடித்த சுந்தர், டீ பையனை அழைத்து இன்னொரு மசாலா டீ கொண்டுவரும்படி உத்தரவிட்டார்.
பிறகு,” இன்னும் கேளு.. ராஜராஜன் தாழ்த்தப்பட்ட மக்களை ரொம்ப கேவலமாக நடத்தினான். அவனோட ஆட்சிக்காலத்தில தாழ்த்தப்பட்ட மக்கள் தனிக்குடியிருப்புகளில் அதாவது ஊருக்கு வெளியே குடிவைக்கப்பட்டாங்க.
தஞ்சை பெரியகோவில் கல்வெட்டுகள்ல, தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்த பகுதிகளைக் குறிக்கும் விதமாக பறச்சேரி, தீண்டாச்சேரி என்கிற பெயர்கள் குறிப்பிடுவதில் இருந்து இதைத் தெரிஞ்சிக்கலாம்.
இந்த ராஜராஜ சோழன் காலத்திலதான், தஞ்சைப் பெரிய கோவில்ல, நானூறுக்கும் மேற்பட்ட பெண்கள் தேவரடியார்களா.. அதாவது பாலியல் அடிமைகளா நியமிக்கப்பட்டாங்க. இதை தஞ்சை பெரியகோவில் வட வெளிச்சுற்றுச் சுவர்ல உள்ள தளிச்சேரிக் கல்வெட்டுகள் சொல்லுது.
இந்தப் பெண்கள், கல்யாணம் செய்துக்கக்கூடாது. கோயில் அர்ச்சகர்களுக்கு ஆசை நாயகிகளா இருக்கணும்கிறது கட்டாயம்.
அதுமட்டுல்ல ராஜராஜனோட ஆட்சிக்காலத்தில்தான் பார்ப்பனர்களுக்கு பிரமதேயம், தேவதானம், சீவிதம் அப்படிங்கிற பெயர்கள்ல பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தானமாக கொடுக்கப்பட்டுச்சு.
இந்த நநிலங்களுக்கு எந்த வரியும் கிடையாது. அதே சமயம், ஏழை விவசாயிங்களுக்கு கடுமையான வரி விதிக்கப்பட்டுது. வரிகளை கட்டாதவங்களுக்கு விதவிதமான தண்டனைகளும் வழங்கப்பட்டுச்சு” என்ற சுந்தர், “இந்த உண்மையெல்லாம் தெரியாம, கற்பனையா எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலையும், ராஜராஜ சோழன் திரைப்படத்தையும் வரலாறுன்னு நினை்சசு ராஜராஜனை பத்தி உயர்வா கற்பனை பண்ணிக்கிட்டிருக்காங்க பலபேரு…!” என்று நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு கிளம்பினார் சுந்தர்.