மகாமகம் என்றதும் பெருந்திரள் மக்கள் கூட்டம் மனத்திரையில் ஓடும். அதோடு, . இன்னொரு விசயமும் மகாமகம் சமயத்தில் கிளம்பும். அதாவது, “மகாமகம் வரும் வருடத்தில் திருமணம் செய்தால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்காது. அந்தத் திருமணம் தோல்வியில் முடிந்துவிடும்” என்பதுதான் அது.
இதனாலேயே ஒத்திவைக்கப்பட்ட அல்லது தடைபட்ட திருமணங்கல் ஏராளம். வரும். 2016ம் வருடம் பிப்ரவரி மாதம் மகாமகம் வருதை ஒட்டி மீண்டும் அந்த செய்தி பரவி வருகிறது.
நிச்சயிக்கப்பட வேண்டிய பல திருமணங்கள், யோசனையில் தள்ளிவைக்கப்படுகின்றன.
“மகாமக வருடத்தில் திருமணம் நடப்பது நல்லதில்லையா..” என்று ஜோதிடர் ராம.சுப்ரமணியனிடம் கேட்டோம்.
அவர் கூறியதாவது:
“ஒவ்வொரு முறையும் பிரம்மன் உறங்கும் போதும் உலகில் பிரளயம் ஏற்பட்டு, பெரும் அழிவு ஏற்படுகிறது என்பது ஐதீகம். இப்படி அழிவுக்குப் பிறகு புதிதாகத் தோன்றியதுதான் இந்த கலியுகம். கலியுகத்திற்கு முன்பு உயிர்கள் தோன்ற விதைகள் மற்றும், அமுதம் கொண்ட பானை ஒன்றை ஓர் குளத்தில் பிரம்மன் வைத்தான். அந்த பானையை வேடன் ரூபத்தில் வந்த சிவபெருமான் அம்பு கொண்டு எய்து உடைத்தார். அதன் மூலம் உயிர்கள் பிறக்க வித்திட்டார்.
கும்பம் என்றால் பானை, கோணம் என்றால் உருக்குலைந்தது என்று அர்த்தம். இதனால் அந்த குடம் உடைந்த இடத்துக்கு கும்பகோணம் என்ற பெயர் வந்தது
இந்த கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடினால் பாவங்கள் கழியும். வருடா வருடம் மாசி மாதம் மக நட்சத்திரத்தின் போது எண்ணற்ற பக்தர்கள் இந்த குளத்தில் குளித்து தங்களது பாவத்தைப் போக்கிக்கொள்கிறார்கள்.
இதே 12 வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் மகாமகம் இன்னும் விசேஷம். அன்று பல லட்சம் மக்கள் வந்து இந்த குளத்தில் ஸ்னானம் செய்கிறார்கள்.
குருபகவானும், சூரிய பகவானும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நேருக்கு நேர் பார்க்கும் தருணம் தான் மகாமகம்.
இந்த சமயத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை செய்யக்கூடாது என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் திருமணம் உட்பட பல சுப காரியங்கள் தள்ளி வைக்கப்படுகின்றன.
அதாவது, மகாமகம் வரும் மாசி மாதம் மட்டுமின்றி, வரும் 2016-ம் வருடம் முழுவதுமே திருமணம் செய்துக் கொள்ள கூடாது என்கின்றனர் சிலர்.
இது தவறான கருத்து. இதற்கு முன்பு, 1992 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் மகாமகம் நடைபெற்ற வருடங்களில் எண்ணற்ற திருமணங்கள் நடக்கத்தான் செய்தன. அதனால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லையே.
அந்த காலத்தில் ஒரு நடைமுறை இருந்தது. அதாவது மகாமக நேரத்தில் குடந்தையில் இருக்கும் சாரங்கபாணி கோவில் மட்டுமின்றி, வேறு பல கோயில்களுக்கும் குடமுழுக்கு விழா நடக்கும். இந்த விழாவில் ஊரே பங்கேற்குமம. அந்த நேரத்தில் குடும்ப விழாக்களை நடத்தினால் கவனம் செலுத்த முடியாது என்பதால் விசேசங்களை தள்ளிவைத்தார்கள்.
இது கும்பகோணத்துக்கு மட்டும்தான். தவிர தற்போது கும்பாபிஷேக பணிகளை கவனிக்க பலரும் இருக்கிறார்கள். நவீன வசதிகள் பெருகிவிட்டன. ஆகவே அவரவர் வீட்டு விசேசங்களை தடையின்றி நடத்தலாம். இறைவன் அருள் பாலிப்பான்” என்று கூறுகிறார் ஜோதிடர் பால. சுப்பிரமணியன்.
ஆகவே திருமணம் உட்பட குடும்பத்தின் சுப காரியங்கள் நடக்கட்டும், மகிழ்ச்சி வெள்ளம்.. ஊஹூம்.. மகிழ்ச்சி வெயில் ஒளிரட்டும்!