கடந்த ஆண்டில் இந்தியாவில் வெறும் 1.35 லட்சம் புதிய வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஏழு ஆண்டுகளில் மிகக் குறைவாகும் என கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.

pranap

மாணவர்களுக்கு கல்விநிறுவனங்களில் ஒரு நிம்மதியற்ற சூழல் நிலவுவதை சுட்டிக்காட்டிய குடியரசு தலைவர், மாணவர்கள் கல்வி பயிலவும் உயர் கல்வியை தொடரவும் கூடிய ஒரு இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் ஒரு காந்தத்தை போல செயல்பட்டு வெளிநாடு செல்ல விரும்பும் அறிவாற்றல் உடைய மாணவர்களை நம் நாட்டு சேவைக்கென இங்கேயே இறுத்தி வைப்பதோடு மட்டுமன்றி ஏற்கனவே அங்கு சென்றவர்களையும் இங்கே மறுபடி கவர்ந்திழுக்கத்தக்க விதமாக செயலாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நமது நாடு இளைஞர் விகிதாசாரம் அதிகமுள்ள நாடாகும். நம் இளைஞர்கள் திறமையானவர்களும் கூட. அப்படியிருக்கும் பட்சத்தில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உருவாக்கப்பட்டால் அதன் விளைவுகள் திருப்திகரமானதாக இருக்கும். இல்லாவிடில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது.
நம் இளைய தலைமுறையினரை நிம்மதியற்ற, விரக்தியான மனநிலைக்கு செல்ல நாம் அனுமதிக்கக்கூடாது. அதுபோன்ற சூழல்கள் நமது நாட்டில் நிலவக்கூடாது. கடந்த ஆண்டில் இந்தியாவில் வெறும் 1.35 லட்சம் புதிய வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஏழு ஆண்டுகளில் மிகக் குறைவாகும். இது உற்சாகமூட்டுவதாக இல்லை. இன்னொருபுறம் மனிதர்களுடைய வேலையை இயந்திரங்கள் ஆக்கிரமிப்பதை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாடுகளில் திறம்பட பனியாற்றும் இந்தியர்கள் நம் நாட்டில் பணியாற்றி நமது நாட்டை முன்னேற்றும் விருப்பத்துடன் நாடு திரும்ப வேண்டும். அதற்கேற்ற வேலை வாய்ப்புகளை நாம் இங்கு உருவாக்க வேண்டும் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தனது உரையில் தெரிவித்தார்.