கோவை,
தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கு அலைக்கழித்ததால், சரிவர சிகிச்சை அளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்தது.
கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள பெரிய குயிலி பகுதியை சேர்ந்த விவசாயி சிவக்குமார் – ரஞ்சிதா தம்பதி. இவர்களுக்கு 3 வயதே ஆன தீபஸ்ரீ என்ற குழந்தை உள்ளது.
குழந்தைக்கு சளி, இருமல் தொல்லை காரணமாக நேற்றுமுன்தினம் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். அங்கு அட்மிட் ஆக சொன்னதால், குழந்தையை அங்கே அனுமதித்து சிகிச்சை பெற்றனர். ஆனால், குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று குழந்தை இறந்து விட்டது. இதனால் குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால், டாக்டர்களின் அலட்சியப் போக்கினால்தான் குழந்தை இறந்ததாக கூறி குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக செலுத்தப்படும் பணத்தை ரூ.100 ரூபாய் நோட்டாக மட்டுமே தர வேண்டும் என்றும், ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வாங்க மறுத்தும் குழந்தையின் பெற்றோர்களை அலைக்கழித்ததாகவும், பணம் வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் காட்டவில்லை எனவும் குழந்தை யின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
சம்பவ இடத்துக்கு சிங்காநல்லூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ஏற்கனேவே இந்த ரூபாய் நோட்டு பிரச்சினையால் ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காத காரணங்களால் இரண்டு குழந்தைகள் மரணத்தை தழுவி உள்ளது குறிப்பிடத்தக்கது.