அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ட்ரம்ப்பின் ஆலோசகராக ஸ்டீவ் பன்னோன் என்பவர் நியமிக்கப்பட இருக்கிறார் என்ற தகவல் பலரையும் அதிரச்சியில் உறைய வைத்திருக்கிறது. காரணம், ஸ்டீவ் பன்னோன் மீது, ” அமெரிக்க வாழ் வெளிநாட்டினருக்கு எதிரானவர், இஸ்லாமிய மற்றும் யூத எதிர்ப்பாளர், தீவிர வலது சாரி சிந்தனையாளர்” என்ற முத்திரை உண்டு. இவரது மனைவியே “என் கணவர் ஸ்டீவ் பன்னோன் ஒரு இன வெறியர்” என்று வெளிப்படையாகவே விமர்சித்தார். அந்த அளவுக்கு ஆபத்தானவர் ஸ்டீவ் பன்னோன்.
அமெரிக்க வெள்ளையின மக்களுக்கு ஆதரவாகவும் கறுப்பர் மற்றும் இஸ்லாமியருக்கு விரோதமாகவும் இனவெறி கருத்துக்களை வெளியிடும் ப்ரெய்பார்ட் நியூஸ் என்ற செய்தி நிறுவனத்தின் தலைமை பதவியில் இருந்தவர் இவர். ட்ரம்பை போலவே இவருக்கும் சிலிக்கான் வேலியில் ஆசியர்கள் அதிகமாக வேலை செய்வது கண்களை உறுத்தியிருக்கிறது. இங்கு வேலை செய்யும் ஆசியர்களால் அமெரிக்க மக்களின் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக இவரும் ட்ரம்பும் அடிக்கடி பேசிவருவது சிலிகான் வேலியில் பணிபுரிந்துவரும் வெளிநாட்டினருக்கு அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. சிலிகான் வேலியில் உள்ள நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இருப்போர் பெரும்பாலும் ஆசியாவை சேர்ந்தவர்கள். குறிப்பாக தெற்காசியாவை சேர்ந்தவர்கள்.
“எனக்கு நாட்டின் பொருளாதாரத்தைவிட நாட்டு மக்களே முக்கியம்” என்று ஸ்டீவ் பன்னோன் பூடகமாக கூறியுள்ளார்.
இதற்கிடையே மைக்ரோசாஃப்ட் நிறுனத்தின் தலைவராக இருக்கும் இந்திய வம்சாவழியை சேர்ந்த சத்யா நாடெல்லா, அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப்புக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் வேற்றுமையிலும் ஒற்றுமை பேணும் கலாச்சாரத்தை கட்டிக்காப்பதில் உறுதியுடன் இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை நாட்டை விட்டு துரத்துவதுதான் ட்ரம்பின் பிரச்சாரங்களில் முன்னனியில் இருந்தது. மெக்ஸிகோவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் எல்லையில் மிகப்பெரிய சுவரை கட்டி எழுப்பப்போவதாகவும், வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொடுக்கும் ஹெச்1பி விசாவை குறைக்கப்போவதாகவும் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.