டில்லி,
சில்லரை தட்டுபாட்டால் வரும் 18ந்தேதி வரை நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
கடந்த 8ந்தேதி இரவு முதல் மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக, பொதுமக்கள் ஆங்காங்கே வங்கிகள், தபால் அலுவலகங்களில் வரிசையில் நின்று பெரும் அவஸ்தைபட்டு வருகின்றனர்.
அதேபோல், தேசிய நெடுஞ்சாலைகளிலும் சில்லரை பிரச்சினை காரணமாக பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, சுங்க வரி கட்டணத்தை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அது நவம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இந்த ரத்து சலுகை வரும் 18ந்தேதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டுவிட்டரில் கூறியுள்ள மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி, சுங்க கட்டணம் ரத்து நவம்பர் 18-ம் தேதி நள்ளிரவு வரையில் நீட்டிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.