திருப்பூர்,
திருப்பூர் அருகே சுடுகாட்டில் சுமார் 60 லட்சம் ரூபாய் அளவுள்ள 500, 1000 ரூபாய்கள் மூட்டையாக கட்டப்பட்டு முட்புதரில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை எடுக்க முயன்றவர்களுக்கு அடிதடி சண்டை மூண்டது. இதில் ஒருவர் மண்டை உடைந்தது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ரோட்டில் சுடுகாடு உள்ளது. அதன் அருகே உள்ள பகுதிகளில் புதர் மண்டி காடாக உள்ளது.
கடந்த 8ந்தேதி இரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த திடீர் அறிவிப்பால், கணக்கில் வராமல் சேர்த்து வைத்திருந்த பணம் அனைத்தும் வெறும் பேப்பராக மாறி விட்டது. இதையடுத்து, இதுபோன்ற கருப்பு பணத்தை வைத்திருந்த பண முதலைகள் என்ன செய்வது என்று தெரியாமல் அதை எரித்தும், குப்பையில் வீசியும் வருகின்றனர்.
நேற்று உ.பி. மாநிலத்தில் கோடிகணக்கான ரூபாய் நோட்டுகள் கட் செய்யப்பட்டு, குப்பையில் போட்டு எரிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல் புனேவில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் அளவுள்ள 1000 ரூபாய் நோட்டுகளை பிளாஸ்டிக் பையில் வைத்து ரோட்டில் தூக்கி வீசி சென்றுள்ளது தெரியவந்தது.
அதேபோல், தமிழ்நாட்டில் திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள சுடுகாடு அருகே உள்ள புதரில் சுமார் 60 லட்சம் பெருமானமுள்ள 500 ரூபாய், 1000 ரூபாய் கட்டுகள் மூட்டையில் கட்டி வந்து தூக்கி வீசப்பட்டிருந்தது. மூட்டை யினுள் இருந்த ரூபாய் நோட்டு கட்டுகள் தூக்கி வீசியதால் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
இதை தற்செயலாக பார்த்த அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், இதுகுறித்து ஊரில் சொல்லியிருக்கிறார். இதனால் அந்த பகுதி மக்கள் அனைவரும் திரண்டு வந்து பணத்தை எடுக்க போட்டிபோட்டனர்.
இதனால் ஒருவருக்கொருவரை பிடித்து தள்ளியும், அடித்துக் கொண்டனர். பணத்தை எடுப்பதில் இருவருக்கு இடையே கடும் அடிதடி சண்டை ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கியதில் ஒருவரின் மண்டை உடைந்தது.
தகவல் அறிந்த அந்தப்பகுதி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் பணத்தை புதருக்குள் வீசி சென்றது யார் விசாரணை செய்து வருகின்றனர்.
இது அந்த பகுதியில் பரரப்பை ஏற்படுத்தி உள்ளது.