கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்ட நோயாளியிடம் கூடுதல் பணம் கேட்டு நோயாளியை சிறை வைத்திருக்கிறது சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை. கணவரை மீட்க வழியறியாத மனைவி நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்கிறார்.
அந்தமானை சேர்ந்த அஜய்சிங் என்பவருக்கு கடந்த ஜூன் மாதம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவரது மனைவி மீனாள் சிங் அவருக்கு தனது ஒரு கல்லீரலை கணவருக்கு தானம் செய்திருக்கிறார். இதற்கென அவர் ஏற்கனவே 33 லட்சம் கட்டியிருக்கிறார். ஆனால் அறுவை சிகிச்சை முடிந்ததும் மருத்துவமனை நிர்வாகம் இன்னும் 39 லட்சம் கூடுதலாக கொடுத்தால் மட்டுமே கணவரை டிஸ்சார்ஜ் செய்யமுடியும் என்று கூறியிருக்கிறது.
ஆனால் அவ்வளவு பணம் தரமுடியாது என்று மீனாள்சிங் சொல்லவே அவரை கணவரை பக்கத்தில் இருந்து பார்க்கவிடாமல் மருத்துவமனை நிர்வாகம் துரத்தியிருக்கிறது. இதையடுத்து மீனாள் சிங் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்திருக்கிறார். கணவரை தான் ஜன்னல் வழியாக மட்டுமே பார்க்கமுடிகிறது அவரை மீட்டுத்தாருங்கள் என்று கதறியிருகிறார். ஆனால் போலீஸ் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
எனவே மீனாள்சிங் தனது கணவரை மீட்டுத்தரும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். இதையடுத்து அஜய் சிங் குறித்து உரிய பதிலளிக்குமாறு பள்ளிக்கரணை போலீசுக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.