சென்னை:,
ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிப்பதற்காக நடுரோட்டில் நின்று போக்குவரத்து போலீசார் மறிப்பது வழக்கம். இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்று போக்குவரத்து உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் ஐகோர்ட்டு உத்தரவுபடி அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை பிடித்து ஸ்பாட் பைன் விதிக்கின்றனர்.
பெரும்பாலான விபத்துக்கள் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வதாலேயே ஏற்படுகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதியில் இருந்து கட்டாய ஹெல்மெட் திட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்தது. கோர்ட்டு உத்தரவு என்பதாலும், விபத்துகளின் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் போக்குவரத்து போலீசார் தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நடுரோட்டில் நின்று வேகமாக வரும் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற விபத்துக்களில் போலீசாரும் பாதிக்கப்படுகின்றனர்.
ஏற்கனவே கடந்த ஆண்டு கே.கே.நகரில், போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் திடீரென மறித்ததால், நிலை குலைந்த செல்வம் (19) என்ற வாலிபர் சாலை தடுப்பில் மோதி பலியானார்.
அதபோல், ஒருசில நாட்களுக்கு முன்பு, சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக்கில் வந்த 2 கல்லூரி மாணவர்களை மடக்க முயன்றபோது, வண்டி நிலை தடுமாறி போலீஸ் மீதுமோதியது. இதில் அவரது வலது கால் முறிந்தது. மாணவர்கள் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
தற்போது 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து, வேகமாக வரும் மோட்டார் சைக்கிள்களை திடீரென மறிக்கக் கூடாது என போக்குவரத்து போலீசாருக்கு, போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.