மதுரை,
திருப்பரங்குன்றம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் செல்வம் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் தொகுதிகளில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியும் ஒன்றாகும்.
இங்கு வருகிற 19-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற இருக்கறிது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26ந்தேதி தொடங்கி 2-ந்தேதியுடன் முடிவடைந்தது. மறுநாள் மனுக்கள் பரிசீலனை நடை பெற்றன. இதில் 30 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சுயேட்சை வேட்பாளர் ராஜா என்பவர் தனது மனுவை நேற்று வாபஸ் பெற்றார். தற்போது அங்கு 39 பேர் களத்தில் உள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு கட்சிக்கும் சின்னங்களை ஒதுக்கி தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிடும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு கட்சியின் மாம்பழம் சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் சட்டப்படி ஒரு குறிப்பிட்ட அளவு வாக்குகள் பெற்றிருந்தால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தை தொடர்ந்து பெற முடியும்.
ஆனால், கடந்த மேமாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டது. இதனால் பா.ம.க குறைந்த அளவே ஓட்டுக்கள் பெற்றதால், அவர்களுக்கான மாம்பழம் சின்னம் ஒதுக்குவதில் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் அந்த கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட சின்னம் வழங்க தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது. ஆனால், தேர்தல் நடைபெறும் மற்ற இரண்டு தொகுதிகளான அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் பா.ம.க.விற்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, அங்கு நடப்பது தள்ளி வைக்கப்பட்ட தேர்தல். ஆனால், திருப்பரங்குன்றத் தில் நடைபெறுவது இடைத்தேர்தல். எனவேதான் இந்த வேறுபாடு என்றனர்.
இது தொடர்பாக திருப்பரங்குன்றம் தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வம், திருப்பரங் குன்றம் தேர்தல் அதிகாரி ஜீவாவை சந்தித்து பேசினார். அப்போது தனக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பின்னர் இதுகுறித்து கட்சி தலைமையிடம் விவாதித்தார்.
அதைத்தொடர்ந்து, இடைத் தேர்தலில் இருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.