
திருப்பதி,
உலக பிரசித்தி பெற்ற கோயிலும், இந்தியாவின் பணக்கார சாமியுமான திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் வடகலை, தென்கலை என்ற நாமம் போடுவது சம்பந்தமான பிரச்சினை வெடித்துள்ளது.
வெங்கடாசலபதி கோயில் என்று அழைக்கப்படும், திருப்பதி ஏழுமலையான் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்று அழைக்கப்படுகிறது.
இத்தலத்தின் மூலவர் ஏழுமலையான் என்றும், வெங்கடாசலபதி என்றும் வேங்கடன் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் பத்மாவதி அம்மையார். இத்தலத்தில் லட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
முடி செலுத்துவது பக்தர்களின் வேண்டுதல்களில் பிரதானமாக இருக்கிறது. இத்தலம் இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட கோயிலாக உள்ளது.

இந்த பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் நாமத்தின் வடிவத்தை மாற்றியதால் ஜீயர்கள் – அர்ச்சகர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வெள்ளிக்கிழமைதோறும் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, கஸ்தூரி பச்சைக் கற்பூரம் கொண்டு திருநாமம் அணிவிக்கப்படும்.
இவ்வாறு அணிவிக்கப்படும் நாமம், அதற்கடுத்து வியாழக்கிழமை கலைக்கப்பட்டு இரண்டு கண்கள் திறந்த நிலையில் சுவாமி அருள்பாளிப்பார்.
நேற்று வழக்கம்போல நடந்த அபிஷேகத்திற்கு பிறகு பிரதான அர்ச்சகரான ரமணதீச்சதலு என்பவர் திருநாமத்தை ஆங்கில எழுத்தான U வடிவில் அமைத்தார்.
இதையடுத்து தோமாலை சேவையின்போது நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்த ஜீயர்கள் நாமத்தின் வடிவம் மாற்றப்பட்டிருப்பதைகண்டு பிரச்சினை ஏற்படுத்தினர். பின்னர் கோயில் நிர்வாகிகளிடம் புகார் கூறினர்.
இதையடுத்து பிரதான அர்ச்சகரான ரமணதீச்சதலுவிடம் விளக்கம் கேட்டுநோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
வைணவத்தை பின்பற்றுபவர்களிடையே வடகலை, தென்கலை நாம பிரச்சனை நீண்டகாலமாக இருந்து வருகிறது. வடகலையைபின் பற்றுபவர்கள் ஆங்கில எழுத்தான U வடிவிலும், தென்கலையை பின்பற்றுபவர்கள் Y வடிவிலும் திருநாமத்தை நெற்றியில் இட்டுக்கொள்வது வழக்கம்.
திருப்பதியில் மூலவருக்கு எந்தவகையிலான நாமம் இடுவது என்றபிரச்சனை ஆங்கிலேயர் காலத்தில் எழுந்த போது, நீதிமன்றம் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வுகண்டது. நாமத்தை U வடிவிலோ அல்லது Y வடிவிலோ அமைக்காமல் இரண்டுக்கும் பொதுவாகதமிழ் எழுத்தான ப வடிவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில் மூலவருக்கு அணிவிக்கப்படும் திருநாமத்தை U வடிவில் பிரதான அர்ச்சகரான ரமணதீச்சதலு மாற்றி அமைத்தார்.

தோமாலை சேவையின்போது இதனைபார்த்த ஜீயர்கள், அர்ச்சகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அர்ச்சர்மீது நடவடிக்க கோரினர். நடவடிக்கை எடுக்க தவறினால் தோமாலை சேவையில் ஜீயர்கள் பங்கேற்கப்போவதில்லை என்று எச்சரித்தனர்.
ஏற்கனவே , மூலவர் அறைக்குள் பேரனை அழைத்துச்சென்றது தொடர்பாக ரமணதீச்சதலுவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோல் கடந்த ஆண்டு மூலவரின் திருநாமத்தை ரமணதீச்சதலுவின் மகன் U வடிவில்மாற்றியதால் அபிஷேக சேவையில் பங்கேற்க அவருக்கு 6 மாதம் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுபோல் காஞ்சிரம் கோயில் யானைக்கு நாமம் போடுவது சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டபோது, கோர்ட்டு தலையிட்டு ஆறு மாதம் வடகலை நாமமும், 6 மாதம் தென்கலை நாமமும் போட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel