லக்னோ,
உ.பியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக, மாநிலம் முழுவதும்,பஸ் மூலம் பிரசாரம் செய்ய அகிலேஷ் ஏற்பாடுசெய்திருந்தார்.
‘சமாஜ்வாதி விகாஸ் ரத யாத்ரா’ என்ற பெயரில் யாத்திரையை தொடங்கினார். ஆனால், யாத்திரை தொடங்கிய சிறிதுநேரத்தில் பஸ் பழுதானதால் அவரது யாத்திரை புஸ்ஸாகிப்போனது.
உ.பி.,ல் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் அகிலேஷ் நேற்று தனது தேர்தல் ரத யாத்திரையை தொடங்கினார். இதற்காக சொகுசு பஸ் ஒன்று தயாரானது. நேற்று யாத்திரை தொடங்கிய சிறிது நேரத்தில் அவர் பயணம் செய்த சொகுசு பஸ் பழுதானது. இதனால் அவரது யாத்திரை பயணம் நிறுத்தி வைக்கப்பட்டது.
உ.பி.யின் தற்போது சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. உ.பி முதல்வராக முலாயம்சிங் மகன் அகிலேஷ் யாதவ் இருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலையொட்டி, உ.பி.யில், காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், பாரதிய ஜனதா போன்ற கட்சிகள் ஏற்கனவே தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் மாதம் உ.பி.யில் இருந்து, டெல்லி வரை ‘கிஷான் யாத்திரை’ என்ற பெயரில் சுமார் 2500கிலோ மீட்டர் தூரம், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியினரும் முதல்வர் அகிலேஷ் சுற்றுப்பயணம் செய்ய பஸ் யாத்திரைக்கு ஏற்பாடு செய்தனர்.
இதற்காக ‘மெர்சிடெஸ் பென்ஸ்’ நிறுவனத்தின் சொகுசு பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டது. தில் ஹைட்ராலிக் லிப்ட் வசதி உள்ளது. உள்ளே வீட்டில் இருப்பது போன்ற வடிவமைப்பு கொண்டது.
நேற்று, இந்த பஸ்சில் அகிலேஷ், தனது குடும்பத்தினருடன் அமர்ந்து யாத்திரை மேற்கொண்டார். தொண்டர்கள் வெள்ளத்தில் பஸ் நகர்ந்து சென்றது.
சுமார் 1 கி.மீ. தொலைவில் சென்றபோது பஸ் பழுதாகி நின்றுவிட்டது. இதனால் அகிலேஷ் வருத்தமடைந்தார். கட்சிக்காரர்களும் நொந்துபோயினர். கோளாறை சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, பயணம் பாதியிலேயே நின்றது. நேற்று 100 கி.மீ தூரம் பயணம் செய்ய அகிலேஷ் திட்டமிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து காரில் யாத்திரையை தொடங்கினார்.