டில்லி,
ஜிஎஸ்டி வரிகளை 4 வகையான வரி விதிப்பாக அமல்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
குறைந்தது 5 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை நான்கு அடுக்காக விதிக்க ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒருமித்த கருத்துடன் நேற்று இறுதி செய்துள்ளது.
இதன்படி,  ஒவ்வொரு வகையான பொருட்களுக்கும், அதற்கேற்றவாது,  அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை வரிகள்  வகைப்படுத்தப்பட இருக்கிறது.
arun_jetly
நாடு முழுவதுக்குமான ஒரே மாதிரியான வரிவிதிப்புக்கு வகை செய்யும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அடுத்த ஆண்டு (2017)  ஏப்ரல் முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க மசோதா  ஜிஎஸ்டி மசோதா  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து  மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது.
இந்த கவுன்சிலின் உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்து ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து இறுதி முடிவு எடுத்துள்ளது.
குறைந்தது  5 சதவீதம் முதல் 28 சதவீதம் வரையிலான நான்கு அடுக்கு வரி விதிப்பு  செய்யும் வகையில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதன்படி வரி விகிதம், 5%, 12%, 18%, 28% என வசூலிக்க ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி செய்துள்ளது.
இதில் ஏழை எளிய  மக்கள் பயன்படுத்தும் உணவு தானியங்களுக்கு வரிவிதிப்பு இல்லை.
அதிக அளவில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு குறைந்த  வரியாக 5 சதவீதம் விதிக்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது:
மக்களால் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும்.
உணவு பொருட்களுக்கு வரி கிடையாது. அதாவது, நுகர்வோர் விலை குறியீட்டுக்கு உட்பட சுமார் 50% பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை. அதிகபட்ச வரியாக 28% நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதற்கு மேல் வரி விதிக்கப்பட்டு வந்த பொருட்களுக்கான வரி 28 சதவீதமாக இருக்கும்.
கலால் மற்றும் மதிப்புக்கூட்டு வரியும் சேர்த்து 30% முதல் 31% வசூலித்த பொருட்களுக்கு அதிகபட்ச வரி 28%. பிற பொருட்களுக்கு நிலையான வரியாக 21%, 18% இருக்கும்.
அத்தியாவசிய பொருட்களுக்கான வரி 5 சதவீதமாக வைத்திருப்பது சாத்தியமாகிறது.
ஆடம்பரமான சொகுசு கார்கள், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரியோடு சேர்த்து, தூய்மை எரிசக்தி கூடுதல் வரியும் விதிக்கப்படுகிறது.
இது மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட உதவும்.
ஜிஎஸ்டி வரி அமலுக்கு வரும் முதல் ஆண்டில் மட்டும், மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கு சுமார் ₹50 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது
. கூடுதல் வரி மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மாநில அரசுகளுக்கான இழப்பீட்டை வழங்க லாம்.
எனவே ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, கூடுதலாக விதிக்கப்படும் செஸ் வரி இருக்காது.
இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை முடிவு செய்யப்பட்டாலும், எந்தெந்த பொருட்கள் எந்த வரி விகிதத்துக்குள் வரும் என்று இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
வரி விகிதங்கள் அந்தந்த துறை வாரியாக முடிவு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டால்தான் ஜிஎஸ்டி வரியின் சாதக, பாதகங்கள் முழுமையாக தெரியவரும்.