புதுச்சேரி:
நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக கடிதம் கொடுத்துள்ளது.
புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் முதல்-அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி. மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் நிறுத்தப்பட்டுள்ளார்.
viduthalia
நாராயணசாமிக்கு, மற்ற கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக, காங்கிரஸ் நிர்வாகிகள் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களை சந்தித்தனர்.  அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரிடம் ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவை நாராயணசாமிக்கு வழங்க முன் வந்தது. அதேபோல் இடதுசாரி கட்சிகள் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடாது என அறிவித்து உள்ளது.
இதை தொடர்ந்து,  விடுதலை சிறுத்தை பொதுச்செயலாளர் ரவிக்குமார், புதுவை முதன்மை செயலாளர் தேவ. பொழிலன் மற்றும் விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
அப்போது நாராயணசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு அளிக்கும் கடிதத்தை வழங்கினார்கள். அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து விடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது,
புதுவையை நாராயணசாமியால்தான் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்ற நோக்கத்தில் அவருக்கு எங்கள் ஆதரவை அளிக்கிறோம்.
மேலும் மத சார்பு சக்திகளுக்கு எதிராக காங்கிரசுக்கு எங்கள் ஆதரவை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
கட்சி தலைவர் திருமாவளவன் வழிகாட்டுதலுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமியை ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளோம்.
நாராயணசாமியை ஆதரித்து எங்கள் தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் 3 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நல கூட்டணி போட்டியிடுவதில்லை என்று முடிவு எடுத்துள்ளது. ஆனால்,
மக்கள் நல கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள்,  தனியாக நாராயணசாமியை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சென்னையில் ஸ்டாலின் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதலில் தனது ஆதரவை திருமாவளவன் அளித்தார். பின்னர் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களின் ஆலோ சனையை ஏற்று ஆதரவை வாபஸ் பெற்றார்..
தற்போது புதுவை அரசியலில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்து கடிதம் கொடுத்திருப்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல்  புதுவையில் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடவில்லை என்று ஒதுங்கி உள்ளது.
இதுபோன்ற அரசியல் நிகழ்வுகள், மக்கள் மனதில் ‘மக்கள் நலக் கூட்டணி’  மக்கி போகிறதோ…?  என்ற சந்தேகத்திற்கு இடமளித்து உள்ளது.