சென்னை,
சென்னையில் நேற்று இரவு டிரிங்க் அண்ட் டிரைவ் விபத்தால் ஆட்டோ ஓட்டுநகர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சென்னை கானகம் பகுதியின் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 6வது பிளாக்கில் வசித்துவருபவர் ஆட்டோ டிரைவர் லட்சுமணன்.
இவர் நேற்றிரவு டைடல் பார்க்கிலிருந்து பெண் ஒருவரை சவாரி ஏற்றிக்கொண்டு ராஜீவ்காந்தி சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் ஆட்டோ மீது வேகமாக மோதியுள்ளது.
இதில் லட்சுமணன் ஆட்டோவிலிருந்து தூக்கி வீசப்பட்டு அருகிலுள்ள பிளாட்பார கல்லில் மோதி தலையில் அடி பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார், லட்சுமணனின் உடலை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனார், அவர் இறந்துவிட்டதை உறுதிபடுத்திய தனியார் மருத்துவமனை அவரது உடலை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய கார் நீல கலர் ஹுண்டாய் ஐ-20 சொகுசு காராகும். காரில் நண்பர்கள் 4 பேர் சேர்ந்து பயங்கர வேகத்தில் ராஜீவ்காந்தி சாலையில் வந்துள்ளனர். நண்பர்கள் நான்கு பேரும் குடித்திருந்ததாக தெரிகிறது.
விபத்து ஏற்படுத்தியவுடன் காரினுள் இருந்த நான்கு பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் ஒருவரை மட்டும் அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். மற்ற 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
விசாரணையில் பிடிபட்டவர்தான் காரை ஓட்டியவர் என்பது தெரியவந்து. அவரது பெயர் இளையராஜா. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நண்பர்களுடன் மது குடித்துவிட்டு கார் ஓட்டியது தெரியவந்தது. பின்னர் அவரை அடையாறு போலீசார் கைது செய்தனர்.
ஏற்கெனவே சென்னையில் ஆடி கார் ஐஸ்வர்யா என்பவர் போதையில் கார் ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் பிரபல வக்கீலின் தம்பியும், ரேஸ் ஓட்டுநருமான விகாஸ் என்பவர் குடிபோதையில் காரை ஓட்டி, ரோட்டோரத்தில் நிறுத்தி வைக்கப்ப்டடிருந்த ஆட்டோக்களில் பயங்கரமாக மோதியதில் 10 ஆட்டோக்கள் நசுங்கின. 12 ஆட்டோ டிரைவர்கள் காயமடைந்தனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் குடிபோதையில் ஏற்படும் விபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீசாரின் மெத்தன போக்கே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.