பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மறுத்ததை அடுத்து அந்த பெண் மணி, நடு ரோட்டில் குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
மகராஷ்டிரா-கர்நாடாக எல்லையில் உள்ளது பிடார் மாவட்டம். இம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு பிரசவ வலியில் மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுரேகா திலிப் என்ற பெண்மணி கொண்டு வரப்பட்டார்.
மருத்துவமனையில் சுரேகாவின் இரத்த அழுத்தம் சோதிக்கப்பட்டது. பிறகு அவர் மகப்பேறு மருத்துவர் ஷில்பா என்பவரிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் டாக்டர் ஷில்பா, அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுத்துவிட்டார். பிரசவ வலி அதிகமானதால், மருத்துவமனை வளாகத்தில் சுரேகாவை படுக்க வைத்த அவரது உறவினர்கள்,சிகிச்சை அளிக்க வருமாறு மருத்துவர் ஷில்பாவை பரிதாபமாக கெஞ்சினர். ஆனால் அவரோ காவல்துறையை அழைப்பேன் என்று மிரட்டியுள்ளார்.
வேறு மருத்துவமனைக்கு கர்ப்பிணிப்பெண் சுரேகாவை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் அளிக்கவும் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதனால் வேறு வாகனத்தை அழைப்பதற்காக சுரேகாவை நடக்க வைத்து அவரது உறவினர்கள் அழைத்துச் சென்றனர். சாலையில் நடந்து கொண்டிருக்கும் போதே,சுரேகாவுக்கு பிரசரவ வலி அதிகமானது. பிறகு நடு ரோட்டிலேயே பெண் குழந்தை பிறந்தது.
இதன் பிறகு, அதே அரசு மருத்துவமனையில் சுரேகா சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
மறுநாள் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை தொடர்ந்து,மாநில குடும்ப நல அதிகாரிகள் அந்த மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.
தன்னைப்போல் வேறு எந்த பெண்ணுக்கும் இந்த கொடுமை நடந்துவிடாதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுரேகா கோரிக்கை விடுத்தார்.