விதைகள் தூவும் முதல்வர் மம்தா
விதைகள் தூவும் மேற்குவங்க முதல்வர் மம்தா

கல்கத்தா,
சிங்கூர் விவசாய நிலத்தில், மீண்டும் விவசாயம் தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விதைகள் தூவி விவசாயத்தை தொடங்கி வைத்தார்..
மேற்கு வங்காளத்தில்  கம்யூனிஸ்டு அரசு ஆட்சியில் இருந்தபோது நானோ கார் தயாரிக்க டாட்டா நிறுவனத்துக்கு சிங்கூர் பகுதி விவசாய நிலம் கட்டாயப்படுத்தி கையகப்படுத்தப்பட்டு டாடா நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது.  997 ஏக்கர் நிலம் சிங்கூரில் கையகப்படுத்தப்பட்டது.
அதை எதிர்த்து அந்த பகுதி மக்கள் போராடி வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக மம்தா பானர்ஜியும் போராட்டத்தில் குதித்தார். ‘
அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். ஆட்சி மாறிய தால் காட்சியும் மாறியது.
விசாரணையில், டாடாவுக்காக கையகப்படுத்தப்பட்ட 997 ஏக்கர்  நிலத்தை திரும்ப ஒப்படைக்க டாடா நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
கோர்ட்டு உத்தரவை வரவேற்ற முதல்வர் மம்தா,  சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தி விவசாயிகளிடம் நிலங்களை திருப்பி ஒப்படைக்க துரித கதியில் செயல்படுவதாக உறுதி அளித்தார்.
அதன்படி கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகளிடம் அவர்களின் நிலங்களுக்கான பட்டாக்கள் மற்றும் இழப்பீட்டு காசோலைகளை முதலமைச்சர் மம்தா பானர்ஜி வழங்கினார்.
இந்நிலையில், நானோ கார் தொழிற்சாலை வளாகம் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பகுதியில் விவசாயிகள் மீண்டும் விவசாயத்தை தொடங்கி உள்ளனர்.
முதலமைச்சர் மம்தா, கடுகு விதைகளை நிலத்தில் தூவி விவசாயப் பணியை தொடங்கி வைத்தார்.
இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது.
அப்போது பேசிய மம்தா பானர்ஜி,
“சிங்கூர் பகுதி உலகின் மாதிரியாக இருக்கும். இங்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும். 65 ஏக்கர்கள் தவிர மீதமுள்ள 997 ஏக்கர் நிலங்கள் ஒப்படைக்க தயாராக உள்ளது. நவம்பர் 10-ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும்” என்றார்.
மேலும், நிலத்தின் தன்மை மற்றும் வரும் நாட்களில் அவர்களின் அறுவடை திட்டம் குறித்து விசாரித்தார்.
இதற்கிடையே சிங்கூரில் அமைக்கப்பட்ட நானோ தொழிற்சாலை வளாகத்தின் பெரும்பாலான பகுதிகள் இடிக்கப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள சிறு பகுதியும் சில நாட்களில் அழிக்கப்படும் என்றும்  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.