சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவால் விரட்டப்பட்டவர்கள் சிலர், தற்போது அவர் சிகிச்சை பெற்றுவரும் அப்பல்லோ மருத்துவமனையில் முகாமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 28 நாட்களாக சென்னை அப்போலோ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை, உடன் பிறவா சகோதரி சசிகலான உடனிருந்து கவனித்து வருகிறார்.
ஜெயலலிதாவை நலம் விசாரிக்க வந்த கவர்னர், மத்திய அமைச்சர், அரசியல் தலைவர்கள் உட்பட எவரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது ஜெயலலிதாவின் உடல் நிலை மேம்பட்டு வருவதாக அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பல்வேறுவிதமான வதந்திகள் பரவி வருகின்றன. வதந்தி பரப்பியவர்கள் என்று இதுவரை எட்டுபேரை காவல் துறை கைது செய்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஜெ.வின் உடன் பிறவா சகோதரி சசிகலாவின் உறவினர்களும் அவ்வப்போது மருத்துவனை வந்து நலம் விசாரித்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று 2.30 மணியளவில் சசிகலாவின் சித்தப்பா மகன் ராவணன் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார்.
இவர், கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறிகைது செய்யப்படட்டு சிறையிலும் அடைக்கப்பட்டவர்.
கோவையை மையமாக வைத்து அதிமுகவில் அதிகாரமாக செயல்பட்ட இவரின் கட்டுப்பாட்டில்தான் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுச்சாமி மற்றும் ஈரோடு கே.வி ராமலிங்கம் ஆகியோர் இருந்ததாக தகவல்கள் உண்டு.
நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த இவர், அங்கு தங்கியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக தொண்டர்கள், “முதல்வரின் அண்ணன் மகள் தீபா கதறி அழுதும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் “அம்மா”வால் விரட்டியடிக்கப்பட்ட (சசிகாலாவின் சித்தப்பாவான) ராவணன் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது எப்படி நடந்தது” என்று முணுமுணுக்கிறார்கள்.