சென்னை,
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொகுதிகிளில் இன்று முதல் பறக்கும் படை சோதனை ஆரம்பமாகிவிட்டது என்று தேர்தல் கமிஷனர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
பணப்பட்டுவாடா புகார் காரணமாகவும், சட்டமன்ற உறுப்பினர் மறைவு காரணமாகவும் காலியாக இருந்த 3 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் 19.11.2016 அன்று தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிருபர்களின் கேள்விக்கு பதில் கூறியதாவது:
“தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு, தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே இந்த தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிட முடியுமா? என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்து ராஜேஷ் லக்கானி கூறியதாவது:-
தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் புகார் கூறப்பட்ட வேட்பாளர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட இதுவரை எந்த தடையும் இல்லை. இனிமேல் என்ன உத்தரவு வரும் என்பதும் எனக்குத் தெரியாது. இதுபற்றி தலைமை தேர்தல் கமிஷன்தான் முடிவு எடுத்து அறிவிக்கும் என்றார்.
மேலும், வேட்புமனுக்கள் நவம்பர் 3-ந்தேதி பரிசீலினை செய்யப்படும். அன்றைய தினம் வரை எந்த அறிவிப்பை யும் வெளியிட தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது. எனவே தேவையான உத்தரவுகள் அங்கிருந்துதான் வர வேண்டும்.
தமிழ்நாட்டில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்து விட்டது.
எனவே இந்த தொகுதிகளின் மாவட்டங்களில் பறக்கும் படையினர் சோதனை இன்று முதல் நடந்து வருகிறது.
எனவே இந்த தொகுதிகள் உள்ள பகுதிகளில் பணம் மொத்தமாக கொண்டு செல்லப்பட்டால், சோதனை நடத்தும் தேர்தல் அதிகாரிகளிடம் உரிய கணக்கு விபரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
வரும் நவ.3 ம் தேதி தேர்தல் பார்வையாளர்கள் தமிழகம் வர இருக்கிறார்கள். தொகுதிக்கு 2 பேர் வீதம் 6 பேர் வர இருக்கின்றனர். தேவைப்பட்டால் கூடுதலாக வரவழைக்கப்படுவார்கள்.
இன்று முதல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபடுகின்றனர்.
ஏற்கனவே தேர்தல் புகார் தெரிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் இடைத் தேர்தலில் போட்டியிட இன்றுவரை தடையில்லை.
ஒரு தொகுதிக்கு இரண்டு பறக்குபடை குழுவினர் இன்று முதல் ஈடுபடுவார்கள். ஒரு குழுவில் 12 பேர் இருப்பார்கள். நான்கு பேர் வீதம் மூன்று சீப்ட் முறையில் பணிபுரிவார்கள்.
அக்டோபர் 23 ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்கள் இடைத்தேர்தலில் வாக்களிக்கத் தடையில்லை.
மற்ற தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் கடந்த தேர்தலின் போது எவ்வாறு கடைபிடிக்கப்பட்டதோ அவ்வாறு இந்த தேர்தலிலும் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.