பிலாஸ்பூரில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டியில் தமிழக அணியும் ரயில்வே அணியும் மோதிக்கொண்டனர். முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 42.2 ஓவர்களில் 121 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதைத்தொடர்ந்து விளையாடிய ரயில்வே அணி 64 ஓவர்களில் 173 ரன்களை பெற்று ஆட்டமிழந்தனர்.
பின்னர், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தமிழக அணி, தினேஷ் கார்த்தியின் அதிரடி ஆட்டத்தால் வலுவான நிலையை எட்டியது. 85 பந்துகளில் தன்னுடைய 25-வது சத்தத்தை பூர்த்தி செய்தார் தினேஷ் கார்த்திக். மொத்தம், 145 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் 163 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தினேசுக்கு இணையாக ஆடிய இந்திரஜித், மலோலன் ரங்கராஜன் ஆகியோர் அரை சதம் எடுத்தார்கள். தமிழக அணி, 132 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 452 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தனர்.
401 ரன்னை வெற்றி இலக்காக கொண்டு ரயில்வே அணியினர், இரண்டாவது இனிங்சை துவங்கினர். கடினமான இலக்கு என்றாலும், தொடக்க வீரர்களான செளரப் மற்றும் சிவாகந்த் சுக்லா இருவரும் சிறப்பான அடித்தளம் அமைத்துக்கொடுத்துள்ளனர்.
இன்றைய ஆட்ட நேர முடிவில் ரயில்வே அணி, 25 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 108 ரன்கள் எடுத்துள்ளது. செளரப் 54, சுக்லா 52 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இன்னும் 293 ரன்கள் எடுத்தால், ரயில்வே அணி வெற்றி பெற்றுவிடும். எனவே நாளைய கடைசி நாள் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பாக்கப்படுகிறது.