சென்னை:
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்த தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நலன் குறித்து அறிய ல்வேறு அரசியல்தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் தி.மு.க. பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வர இருப்பதாக இன்று மதியமே தகவல் பரவியது. அப்போது முதலே மருத்துவமனையில் கூடி நின்ற அ.தி.மு.க. தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் மருத்துவமனை வந்தார் மு.க. ஸ்டாலின். அவருடன் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோரும் வந்திருந்தார்கள். மூவரும் மருத்துவனைக்குள் சென்றார்கள். அப்போதெல்லாம் மருத்துவனை முன்பு கூடியிருந்த அ.தி.மு.க.வினரிடையே ஒருவித இறுக்கமான மவுனம் நிலவியது.
மூவரும் மருத்துவமனைக்குள் சென்று அமைச்சர்கள் மற்றும் மருத்துவர்களை சந்தித்து திரும்பினர். பிறகு செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அ.தி.மு.க.வினர் ஸ்டாலினுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள்.
“வதந்திகளை பரப்பிய திமுகவினரே திரும்பி போ” என்றும், “ஸ்டாலினே திரும்பி போ” என்றும் முழக்கமிட்டனர். துரைமுருகன் மற்றும் பொன்முடிக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
ஸ்டாலின் காதில் விழும்படியும் பலர், கடுமையான வார்த்தைகளுடன் முழக்கமிட்டனர். ஆனால் அதை கவனிக்காததுபோல் காரில் ஏறிச் சென்றார். அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர், “ஸ்டாலின் நாகரீகத்துடன் கவனிக்காததுபோல சென்றுவிட்டார். ஏன் இப்படி தேவையில்லாமல் கத்துகிறீர்கள்” என்று சொல்லி தொண்டர்களை அடக்கினர்.
ஆனால் ஸ்டாலின் சென்ற பிறகும் அ.தி.மு.க. தொண்டர்கள் சிலர் முழக்கமிட்டுக்கொண்டே இருந்தனர். பிறகு சிறிது நேரத்தில் பரபரப்பு அடங்கியது.