கடலூர்:
தொடர் மழை, வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு உணவு, குடிநீர் கிடைக்காமல் தவித்த மக்கள், சாலை மறியலில் இறங்கினார்கள்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. தொடர் மழையால் கடலூர் மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள்.
இதுவரை கனமழைக்கு கடலூர் மாவட்டத்தில் 22 பேர் பலியாகி உள்ளனர்.
வயல்களில் வெள்ளம் சூழ்ந்ததால் வாழை, கரும்பு, நெல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 75 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் இல்லை. உணவு, குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது.
இந்த நிலையில் குடிநீர், உணவு கேட்டு மக்கள் பல இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். “அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். ஆனால் அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்படுகிறார்கள்.. பேரிடர் மேலாண்மை குழுவின் பணிகளும் திருப்திகரமாக இல்லை. உள்ளாட்சி பிரதிநிதிகளும், பிரச்சினையை தீர்க்கவில்லை” என்று மக்கள் குமுறலுடன் சொல்கிறார்கள்.