தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிரபல ஆங்கில ஏடாக டி.என்.ஏ., தற்போது அ.தி.மு.க. மற்றும் தமிழக நிலை குறித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.
அந்த கட்டுரை:
அதிமுகவின் முகமாக கருதப்படும் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றது முதல் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் அப்பல்லோவை நோக்கியே திரும்பியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களும், அறிக்கைகளும் அதையொட்டி இறக்கை கட்டி பறக்கும் வதந்திகளும் தமிழக அரசியலை உச்ச கட்ட கொதிநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சையின்கீழ் இருந்து வரும் இத்தருணத்தில் கட்சி யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது? இப்போது யார் கட்சியை நடத்துகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி! முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் உறுதியான தலைவர்கள் யாரும் இல்லாததே இத்தனை கேள்விகள் எழக்காரணம்.
“இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை, அம்மா பூரண குணமடைந்து திரும்பி வந்து ஆட்சியை செவ்வனே தொடர்வார்கள்” என்று மட்டும் அதிமுக பேச்சாளர் வி.மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.” இச்சூழலில் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்பது யாவரும் அறிந்ததே!
முதல்வர் இல்லாத தருணங்களில் கட்சியை நடத்துபவர் முதல்வரின் உடன்பிறவா சகோதரி என்று வர்ணிக்கப்படும் சசிகலா நடராஜன்தான் என்கின்றனர் கட்சியில் அவருக்கு நெருக்கமானவர்கள், இப்படித்தான் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்த தருணத்தில் கட்சி நடத்தப்பட்டது என்கிறார் அரசியல் விமர்சகர் ஞானி சங்கரன்.
ஆனால் சிறையில் இருப்பதும் மருத்துவமனையில் இருப்பதும் ஒன்றல்ல. இப்போது முடிவுகள் ஏதும் எடுக்க இயலாத நிலையில் முதல்வர் இருக்கிறார். இத்தருணத்தில் முதல்வரை விட உயர்ந்த பதவியில் இருக்கும் ஆளுனரையே முதல்வரை பார்க்கவிடாமல் தடுக்கும் அளவுக்கு அதிகாரத்துடன் செயல்படுவது யார்? ஏன்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
முதல்வரின் தோழி சசிகலாவுக்கு கட்சிக்குள்ளேயே அதிருப்தியாளர்கள் நிறைய இருக்கிறார்கள். அதில் அவரது சொந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அடக்கம். இவரைத்தவிர நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகிய இருவரும் கட்சியில் செல்வாக்கு மிக்கவர்களாக மதிக்கப்படுகிறார்கள்.
எது எப்படியோ வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை கட்சியின் அடையாளமாக விளங்கும் முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரம் இல்லாமல் சந்திக்க வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுக இருக்கிறது. தொண்டர்களோ ஒருபக்கம் பொறுமையை இழந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைவெல்லாம் இப்பொழுது உள்ளாட்சி தேர்தலைவிட தங்கள் தலைவரின் உடல்நலத்தின் மீதே பதிந்துள்ளது.
தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. முதல்வர் பூரணநலம் பெற்று திரும்ப வேண்டும் என்ற அக்கறையோடு அனைவரும் மனதார வாழ்த்தினாலும் மறுபக்கம் ஒருவேளை துரதிர்ஷ்டவசமாக அவருக்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டால் அடுத்து அதிமுகவின் நிலை என்ன, என்ற குழப்பமும் கேள்வியும் அனைவர் மனதிலும் எழும்பாமல் இல்லை.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கூறும்போது ஜெயலலிதாவுக்கு பின் அவரது இடத்தை நிரப்பக்கூடிய தலைவர்கள் கட்சியில் யாரும் இல்லை. சசிகலாவின் தலைமையை அதிமுகவின் மற்ற தலைவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்போது இருக்கும் சூழலில் முதல்வருக்கு பின் அதிமுக பல கூறுகளாக உடையும் சாத்தியம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.