சென்னை:
காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல், கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இது எதையும் கண்டிக்காமல் பிரதமர் மவுனம் காப்பது நல்லதல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டிற்கு சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக காலில் போட்டு மிதித்திருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்திருக்கிறது.
இவை எதுவுமே இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கோ, கூட்டாட்சி தத்துவத்திற்கோ வலிமை சேர்ப்பவையல்ல.
காவிரி சிக்கல் குறித்த வழக்கை நேற்று முன்நாள் விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, ‘‘காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகம் மதித்து தான் ஆக வேண்டும்.
அவ்வாறு செய்ய கர்நாடகத்திற்கு கடைசி வாய்ப்பு தருகிறோம். இந்த ஆணையை செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்தால் அதை செயல்படுத்த வைப்பது எப்படி? என்பது எங்களுக்கு தெரியும்’’ என்று எச்சரித்திருந்தது.
அதற்கு பிறகும், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாத கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம், ஆலோசனை என பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் தர முடியாது என்று கூறியிருக்கிறது.
அதுமட்டுமின்றி, காவிரி சிக்கலில் கடந்த 10 நாட்களில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் கர்நாடகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும், அவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரி மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற ஆணை தவறானது என்றும் கூறி மறு ஆய்வு செய்யக் கோரியிருக்கிறது.
கர்நாடகத்தின் இந்த நடவடிக்கைகள் உச்சநீதி மன்றத்திற்கும், அரசியல மைப்பு சட்டத்திற்கும் விடப்பட்டச் சவால்கள் என் பதில் ஐயமில்லை.
கர்நாடகத்தில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அம்மா நிலத் தலைவர்கள் பேசிய கருத்துக்கள் இந்தியாவின் ஒற்றுமைக்கு உலைவைக்கக் கூடியவை.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கக் கூடாது; தமிழகத்திற்கு ஒருபோதும் தண்ணீர் வழங்கக் கூடாது என்று அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
மற்றொருபுறம், இந்தியாவின் பிரதமராக இருந்த தேவகவுடா அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக நடந்து கொள்வதற்கு பதிலாக கன்னட இனவெறி குழுவின் தலைவராக மாறி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெங்களூருவில் சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
சட்டத்திற்கு எதிரான இப்போராட்டத்திற்கு அம்மாநில முதல்வர் சித்தராமய்யா நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
அமைதியையும், போர் நிறுத்த உடன்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என்று அண்டை நாடுகள் முதல் ஐ.நா. வரை வலியுறுத்திய போதிலும் அதை மதிக்காமல், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை தூண்டிவிட்டு வருகிறது பாகிஸ்தான். அதனால் தான் அந்நாட்டை பலரும் போக்கிலி தேசம் என விமர்சிக்கின்றனர்.
கர்நாடகமும், பாகிஸ்தானைப் போலவே அரசியல் சட்ட வல்லுனர்கள், உச்சநீதிமன்றம் எனயாருடைய அறிவுரையையும் மதிக்காமல் தமிழகத்திற்கு உரிமைப்படி தர வேண்டிய தண்ணீரை தராமலும், தமிழர்களின் உடைமைகளை சூறையாடியும் போக்கிலி மாநிலம் என நிரூபித்து வருகிறது.
இதை மத்திய அரசும் வேடிக்கைப் பார்ப்பது தான் வேதனையளிக்கிறது.
மேலாண்மை வாரியத்திற்கு தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகியவை உறுப்பினர்களை அறிவித்துவிட்ட நிலையில், கர்நாடகம் மட்டும் உறுப்பினரை அறிவிக்க வில்லை. இதை பிரதமர் கண்டித்திருக்க வேண்டாமா?
யாருக்கும் சாதகமாக பேசாமல் ஒதுங்கியிருப்பது நடுநிலையல்ல… நியாயத்தின் பக்கம் நிற்பது தான் நடுநிலை என்பதை அறியாதவரா பிரதமர்? என அடுக்கடுக்கான வினாக்கள் எழுகின்றன. ஆனால், அவற்றுக்கு பதிலளிக்க ஆளில்லை என்பது தான் பெருஞ்சோகம்.
காவிரி சிக்கலில் மத்தியரசு இனியும் அமைதியாக இருப்பது சரியானதாக இருக்காது.
உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடகத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்.
அதே போல், கர்நாடகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
இவற்றுக்கு கர்நாடக அரசு முட்டுக்கட்டை போட்டால், அம்மாநில அரசை வழிக்கு கொண்டுவர எதை செய்ய வேண்டுமோ, அதை மத்திய அரசு செய்ய வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.