சென்னை :
முதல்வர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இருப்பதால், அவர் சிகிச்சை பெற்று வரும் வேளையில் புகைப்படத்தை வெளியிட வேண்டும் ன்றெல்லாம் வற்புறுத்த வேண்டியதில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
த.மா.கா. மாநில துணைத் தலைவர் தேவதாஸ் மற்றும் பல நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். இதற்காக சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய திருநாவுக்கரசர் அனைவரையும் வரவேற்று பேசினார்.
“கொஞ்ச நாட்கள் சுற்றுப் பயணம் செய்து விட்டு சொந்த வீட்டுக்கு திரும்புவது போல் திரும்பி வந்திருக்கிறீர்கள். கட்சியில் இணைந்துள்ள உங்களுக்கு தகுந்த பதவிகள் வழங்கப்படும்” என்றார்.
மேலும், “உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இடங்களுக்கான பேச்சுவார்த்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க.வினருடன் நடந்து வரும் பேச்சு வார்த்தை திருப்திகரமாக அமைந்துள்ளது. தொடர்ந்து பேசி வருகிறோம். சென்னை மாநகராட்சியில் காங்கிரசுக்கு இதுவரை 14 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த வார்டுகள், மகளிர் வார்டுகள் எத்தனை என்பதெல்லாம் இனிதான் முடிவு செய்யப்படும்.
கோவை மாநகராட்சியில் 10 வார்டுகளும், நாகர்கோவில் நகராட்சியில் 19 வார்டுகளும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
எம்.பி., எம்.எல்.ஏ, பதவிகளுக்கு போட்டியிட்ட எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்காது. ஆகவே, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பலரும் விரும்புவார்கள். எங்களைப் போலவே தி.மு.க.விலும் பலர் விரும்புவார்கள். எனவே கேட்ட அளவுக்கு இடங்கள் கிடைக்காமல் போகலாம். அதற்காக திருப்தி அல்லது அதிருப்தி என்ற பேச்சுக்கு இடமில்லை.
பஞ்சாயத்து தலைவர்கள் பதவி ஏலம் முறையில் தேர்வு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் பெற்று விரைவாக வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன். மருத்துவமனை நிர்வாகம் சார்பிலும், அரசு சார்பிலும் தினமும் அவரது உடல்நிலை குறித்து அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. முதல்வர் என்ற முறையில் அவருக்கு தேவையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வெளிநாடுகளில் இருந்தும் மருத்துவர்களை அழைத்து வரலாம். தேவையானால் மத்திய அரசும் உதவி செய்ய வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இருப்பதால் சிகிச்சை பெற்று வரும் இந்த வேளையில் புகைப்படத்தை வெளியிட வேண்டும். டி.வி.யில் வெளியிட வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்த வேண்டியதில்லை. அந்த அளவுக்கு ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும். முதல்வர் உடல்நிலை குறித்த வதந்திகளை பரப்புவது கண்டனத்துக்குரியது. அவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.