டெல்லி:
சுவாதி கொலை கைதி ராம்குமார் தற்கொலை வழக்கில், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது தனியார்  மருத்துவர் உடன் இருக்க அனுமதி கோரி, ராம்குமார் தந்தை பரமசிவம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
ramkumar
சுவாதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்வது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம்குமார் கடந்த சில தினங்களுக்கு  முன் புழல் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். மின்வயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை  செய்யும் குழுவில் தங்கள் தரப்பு மருத்துவரையும் சேர்க்க கோரி சென்னை ராம்குமார் தந்தை பரமசிவம் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.
அதனை தொடர்ந்து  ராம்குமார் தந்தை கடந்த இரு தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு இன்று உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் ராம்குமாரின் தந்தை பரமசிவத்தின் கோரிக்கை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் எய்ம்ஸ் மருத்துவரை நியமித்து பிரேத பரிசோதனையை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்,  கடந்த 10 தினங்களுக்கு மேலாக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் ராம்குமார் உடல் இரண்டு நாட்களுக்குள் பிரேத பரிசோதனை செய்யப்படும்.