மதுரை:
மதுரையை அடுத்த கீழடி கிராமத்தில் மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி கழகம், அகழ்வாராய்ச்சி நடத்திக்கொண்டிருக்கிறது. மொத்தம் நூற்றி எட்டு ஏக்கர் பரப்பளவில் ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டு தற்போது அரை ஏக்கர் நிலப்பரப்பில் மட்டும் ஆராய்ச்சி நடந்துள்ளது.
இந்த அகழ்வாராய்ச்சியின்போது அரிய பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை இன்னும் ஓரிரு நாட்களில் பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லவும் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதைத் தடுக்கக்கோரி வரலாற்று ஆராய்ச்சியாளர் ஹரிசங்கர் கிருஷ்ணதுளசி முதல்வருக்கு, முகநூல் மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் முதல்வர் ஜெயலிலதாவுக்கு எழுதியுள்ள கடிதம்:
“மிகவும் அவசரம்…
அன்பிற்குரிய அம்மா அவர்களுக்கு…
மதுரையை அடுத்த கீழடி கிராமத்தில் மத்திய அரசு தொல்பொருள் ஆராய்ச்சி நடத்தியது…
மொத்தம் நூற்றி எட்டு ஏக்கர் பரப்பளவில் இதுவரை அரை ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே ஆராய்ச்சி நடந்துள்ளது…
சரித்திரத்தையே புரட்டிப் போடும் அளவுக்கு சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான நகர நாகரிகம் , கண்டறியப் பட்டுள்ளது…
சிந்து சமவெளி நாகரிகத்தினை விட பழமையான, மேம்பட்ட நாகரிகமாகத் தமிழன் வாழ்ந்திருக்கிறான்…
தமிழ் பிராமி எழுத்து, ப்ராகிருதம் என எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது…
வெறும் அரை ஏக்கரில் மட்டுமே 2500 பொருட்களை, அகழ்ந்தெடுத்துள்ளனர்…
அவற்றை அருங்காட்சியகம் அமைத்து வைக்க இரண்டு ஏக்கர் நிலம் தேவை…
ஓரிரு நாட்களில் அவை இடமில்லை என்று காரணம் காட்டி, பெங்களூரு, மைசூருக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்து உள்ளதாகத் தெரிகிறது….
இந்தப் பொக்கிஷங்கள் கன்னடர்கள் கையில் கிடைத்தால்….?
நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது தாயே…
தயவுசெய்து மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு நமது செல்வங்களைக் காப்பாற்றுங்கள் தாயே…
ஒரு தமிழ்க் காதலனாக, வரலாற்று ஆராய்ச்சியாளனாக உங்களை மண்டியிட்டு வேண்டுகிறேன் தாயே…
நமது மக்களுக்காகவே உங்களை அர்ப்பணித்துக் கொண்டவர் நீங்கள்….
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள் தாயே… நன்றிகள்….” இவ்வாறு தனது முகநூல் கடிதத்தில் ஹரிசங்கர் கிருஷ்ணதுளசி தெரிவித்துள்ளார்.
மேலும், இதே தகவல்களை மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்திருப்பதாகவும், இது குறித்து பொது நல வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.