டில்லி:
ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கை ராம்குமார் தந்தை பரமசிவம் தாக்கல் செய்துள்ளார்.
அதில், ராம்குமார் பிரேத பரிசோதனையின் போது தங்களது தரப்பு மருத்துவரை சேர்க்கக்கோரி அவரது தந்தை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
ராம்குமார் பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவரைச் சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்ததை அடுத்து ராம்குமாரின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மின் கம்பியை வாயில் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தாலும், இதனை நம்ப மறுத்த அவரது தந்தை பரமசிவம், பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இதனை ஏற்க மறுத்த நிலையில், இரண்டு பேர் கொண்ட அமர்வில் விசாரிக்க மேல் முறையீடு செய்தார் பரமசிவம். இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் தனியார் மருத்துவர் குறித்து கருத்து வேறுபாடு உருவானதால் 3வது நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, 3வது நீதிபதி கிருபாகரன் இந்த வழக்கை விசாரித்து, பிரேத பரிசோதனையின்போது எய்ம்ஸ் மருத்துவர் உடன் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனை ஏற்க மறுத்த ராம்குமார் தந்தை பரமசிவம், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.கே. கவுலிடம் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், தலைமை நீதிபதி, இந்த மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கொண்டு விசாரிக்க முடியாது என்றும் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தை நாடவும் அறிவுறுத்தினார்.
இதனையடுத்து, ராம்குமாரின் தந்தை பரமசிவம் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் இன்று ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கை மேல் முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பின்னர்தான் ராம்குமாரின் பிரேத பரிசோதனை தனியார் மருத்துவர் ஒருவர் முன்னிலையில் நடக்குமா இல்லையா என்பது தெரிய வரும். வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்பது குறித்து இதுவரை எந்தவித தகவலும் இல்லை.