கோவை:
இந்து முன்னணி கோவை மாநகர் செய்தி தொடர்பாளர் சசிகுமார் நேற்று முன்தினம் கொல்லப்பட்டதை அடுத்து, கோவை பகுதியில் அந்த அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, “தமிழகம், குஜராத் போல மாறும்” என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அதிரடியாக பேசியுள்ளார்.
இந்து முன்னணி கோவை மாநகர் செய்தி தொடர்பாளராக பொறுப்பு வகித்தவர் சசிகுமார். இவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 11.30 மணி அளவில், சுப்பிரமணியபாளையத்திலுள்ள தனது வீட்டிற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் நான்கு பேர் வழிமறித்தனர். பிறகு சசிகுமாரை அரிவாளால் வெட்டினர். இதில் சசிகுமார் கீழே சரிந்து விழுந்தார். மர்ம கும்பல் தப்பி சென்றது.
வெட்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சசிகுமார் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
தகவல் அறிந்த இந்து முன்னணியினர், மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. கோவையின் பல பகுதிகளில் இந்த அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனமும் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதற்கிடையே இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரணியம், சசிகுமார் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். , ‘காவல்துறையினரின் அஜாக்கிரதை காரணமாகவே எங்கள் உண்மைத் தொண்டர் ஒருவரை பறிகொடுத்துள்ளோம். அவருக்கு ஏற்கெனவே கொலை மிரட்டல் வந்தது. அதை உத்தேசித்து போலீஸ் பாதுகாப்பும் (பிஎஸ்ஓ) அளிக்கப்பட்டிருந்தது. அதை சமீபத்தில் போலீஸார் விலக்கிக் கொண்டனர். அதைத் தொடர்ந்தே இந்த கொலை நடந்துள்ளது!’ என்று தெரிவித்தார்.
மேலும், “தமிழகம் குஜராத் ஆக மாறும்” எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆவேசத்துடன் தெரிவித்தார்.