சென்னை:
பாராலிம்பிக்கிம் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் இன்று இரவு சென்னை திரும்புகிறார் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்து முதல்பரிசான தங்க பதக்கத்தை வென்றார். இந்தியா இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்துடன் பதக்க பட்டியலில் 43வது இடத்தைப் பிடித்தது.
போட்டி முடிவடைந்ததை அடுத்தது, இந்திய வீரர்கள் நேற்று அதிகாலை 3 மணிக்கு டெல்லி வந்தனர். அதையடுத்து நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இன்று வீரர்கள் அனைவரும் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு திரும்புகின்றனர்.
தமிழக வீரர் மாரியப்பன் ஏர் இந்தியா விமானம் மூலம் 5 மணிக்கு டெல்லியிலிருந்து சென்னை புறப்படுகிறார். இன்று இரவு சென்னை வந்தடையும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.