சென்னை:
பிளஸ்2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இணையத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
செப்டம்பர், அக்டோபர் 2016-க்கான மேல்நிலை துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் புதன்கிழமை (செப். 21) பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
www.tngdc.gov.in என்ற இணையதளத்தில் DEPARTMENT OF EXAMINATION என்பதை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் HSC September/October 2016 Hall Ticket Download என்பதனை கிளிக் செய்து விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்தால் அனுமதி சீட்டு கிடைக்கும்.
செய்முறைத் தேர்வு: செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கும் குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாத வர்கள் கட்டாயம் செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்வுக்கும் வருகை புரிய வேண்டும்.
அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுக்கு வருகை தர வேண்டும்.
அதோடு, மொழிப்பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி(தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, செய்முறை தேர்வு தேதி குறித்த விவரங்களை தனித்தேர்வர்கள் தாம் தேர்வு எழுதும் மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ளலாம்.
குறிப்பாக எக்காரணம் கொண்டும் உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.