சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதியை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்  சந்தித்தார். முன்னதாக இன்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்த நிலையில், திருநாவுக்கரசர் – கருணாநிதி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இன்று தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினை  த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பிறகு ஜிகே வாசனிடம், “உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து பேசினீர்களா” என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஜிகேவாசன்,  “அரசியல் ரீதியான சந்திப்பு” என்று பூடகமாக சொல்லிவிட்டுச் சென்றார்.

திருநாவுக்கரசர் - கருணாநிதி (கோப்பு படம்)
திருநாவுக்கரசர் – கருணாநிதி (கோப்பு படம்)

இதையடுத்து, வரும் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுடன் த.மா.கா. கூட்டணி வைக்கக்கூடும் என்ற யூகங்கள் கிளம்பின. அதோடு, ஏற்கெனவே தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸின் நிலை குறித்து் கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் திடீரென தி.மு.க. தலைவர் கருணாநிதியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலுவும் உடன் இருந்தார்.
ஜிகே வாசன் – ஸ்டாலின் சந்திப்புக்குப் பிறகு நடந்த இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி நீடிக்கும் என்றும், அக் கூட்டணியில் த.மா.கா. வருவது குறித்து இரு தரப்பும் விவாதித்ததாகவும் சொல்லப்படுகிறது.