ஹரியானா:
நாட்டில் கற்பழிப்புகளும், கொலைகளும் நடப்பது சகஜம்தான். இதுபோன்ற குற்றங்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நடப்பதுதான். நான் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை என்று ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தின் 50-வது பொன்விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்வரிடம் நிருபர்கள் சமீபத்தில் நடந்து பரபரப்பை ஏற்படுத்திய இரு இளம்பெண்கள் கற்பழிப்பு-கொலை சம்பவம் பற்றியும், பிரியாணியில் மாட்டிறைச்சி இருக்கிறதா என்று இஸ்லாமியரின் கடைகளில் அரசு நடத்திய ஆய்வு மற்றியும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் தெரிவித்த முதல்வர் மனோகர்லால், ஹரியானாவின் பொன்விழாவைக் கொண்டாட வந்திருக்கிறோம், இன்றைக்கு இதுதான் முக்கிய விஷயம். எனவே அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தி கேள்விகளை எழுப்பாதீர்கள் என்று கூறினார். நாட்டில் கற்பழிப்பும், கொலையும் நடப்பது சகஜம்தான் என்றும் கூறினார்.
அவரது இந்த பதில் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
ஹரியானா மாநிலம் மேவாட் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி ஒரு மர்ம கும்பல் வீடு புகுந்து 20 மற்றும் 14 வயதான இரு இளம்பெண்களை கற்பழித்து கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் நாடும் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே போல இஸ்லாமியர் வாழும் பகுதிகளில் உள்ள உணவகங்களில் ஹரியானா அரசு நடத்திய மாட்டிறைச்சி பரிசோதனையும் மிகப்பெரிய கண்டனத்தை நாடு முழுவதும் சம்பாதித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.