சென்னை:
காவிரி பிரச்சினை காரணமாக 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11 மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரியில் தமிழகத்தின் உரிமையை காக்க வலியுறுத்தி, சென்னை மதிமுக தலைமை அலுவலகத்தில் 11 மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாத போக்கை கடைபிடித்து வருகிறது. இந்நிலையில் காவிரியில் தமிழகத்தின் உரிமையை காக்க வேண்டும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தமிழகத்துக்கு உரிய நீரை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் 11 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்களான சதீஷ், சூரியா, மகி உள்பட 11 பேர் தொடர்ந்து 4வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளனர்.
\இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் தமிழரசன், கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜகுமாரன், செய்தி தொடர்பாளர் பிரேம்குமார், திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் சதீஷ் உள்பட ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக வாழ்வுரிமை கட்சி செயலாளர் செல்லா மற்றும் தமிழ் அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஆதரவு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதேபோல் இந்த போராட்டத்துக்கு மதிமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது.