சென்னை:
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக சில அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பேருந்துகள், லாரிகள் ஏராளமாக எரிக்கப்பட்டுள்ளன.
இதன் எதிர்விளைவாக,தமிழகத்தில் கர்நாடக பதிவெண் கொண்ட சில வாகனங்களும், ஓரிரு கர்நாடக நிறுவனங்களும், கர்நாடக டிரைவர் ஒருவரும் தாக்கப்பட்டனர்.
உடனே கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதி, “தமிழகத்தில் உள்ள கன்னடர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே நேரம், பெங்களூருவில் தமிழ் இளைஞர் மிகக் கடுமையாக தாக்கப்பட்டு மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்ட செயலுக்கு இதுவரை தமிழக முதல்வர் ஜெயலிலா கண்டனம் தெரிவிக்க வில்லை.
அந்த நிகழ்வைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் தமிழர்களின் வாகனங்கள் குறி வைத்து எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் வரும் நிலையில் அதுகுறித்தும் கருத்து தெரிவிக்காமல் இருந்தார்.
சித்தராமையா கடிதம் எழுதிய பிறகு, பதில் கடிதம்போல், அவருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் “கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.. தமிழக மக்கள் மற்றும் அவர்களுடைய உடமைகள் மீதான தாக்குதல்கள் வருத்தம் அளிக்கிறது” என்று குறிப்பிட்டு உள்ளார்.