புதுடெல்லி:
வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 20-ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் நீர் திறக்க வலியுறுத்தியும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரியும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்திற்கு காவிரியில் நாள்தோறும் 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு கடந்த 5ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், காவிரி கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு 3 நாட்களில் அணுக வேண்டும். தங்களது கோரிக்கையை தமிழகம் 3 நாட்களில் குழுவிடம் அளிக்க வேண்டும். 3 நாட்களுக்குப் பிறகு கர்நாடக அரசின் நிலையை குழு கேட்டறிய வேண்டும். இரு மாநில நிலைமைகளையும் கேட்டறிந்து 4 நாட்களில் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
அதற்கிடையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செய்யக்கோரி மேல்முறையீட்டு மனுவை, அவசர வழக்காக கர்நாடக அரசு தாக்கல் செய்தது. அதை நேற்று விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதி இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்து, அதன்படி இன்று காலை விசாரணை நடைபெற்றது.
கர்நாடக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவுக்கு ஏற்றதல்ல என்று கூறி, கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் கர்நாடக வழக்கறிஞர்களின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், காவிரியில் இருந்து செப்டம்பர் 20ஆம் தேதி வரை தினந்தோறும் 12 ஆயிரம் கனஅடி தண்ணீரைத் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Patrikai.com official YouTube Channel