டில்லி:
ரிலையன்சின் ஜியோ நெட்வொர்க்குடன் ஒத்துழைக்க போட்டி நிறுவனங்கள் மறுப்பதாக அம்பானி குறை கூறி உள்ளார்.
கடந்த வாரத்தில் மட்டும் ஜியோ வாடிக்கையாளர்கள் போட்டி நிறுவனங்களின் மொபைல் எண்ககளுக்கு செய்த 5 கோடி கால்கள் முடக்கப்பட்டது . இது அந்நிறுவனங்களின் திட்டமிட்ட சதி என்று குற்றம் சாட்டுகிறார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.
எக்கனாமிக் டைம்ஸ் இதழுக்கு சமீபத்தில் பேட்டியளித்த அம்பானி,
போட்டி நிறுவனங்கள் வேண்டுமென்றே ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து தங்கள் எண்களுக்கு வரும் கால்களை முடக்குகிறார்கள். இது சட்டத்துக்கு புறம்பானது என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர்கள் தெரிவிக்கும் எந்தக் காரணங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தாம் அந்த நிறுவனங்கள் மீது வழக்குத் தொடுப்பது பற்றி பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த செல்லுலார் ஆப்பரேட்டர்ஸ் கூட்டமைப்பின் இயக்குநர் ராஜன் மேத்தியூஸ் போட்டி நிறுவனங்கள் ரிலையன்ஸ் கால்களுக்கு இணைப்பை வழங்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அது ரிலையன்ஸ் ஜியோவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை என்பதே உண்மை என்று குறிப்பிட்டார்.