வவுனியா:
விடுதலைப்புலிகளின் ஊடக பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்டர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் ஊடக பொறுப்பாளராக இருந்தவர் தயா மாஸ்டர் என்கிற வேலாயுதம். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2006-ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட சட்ட விதிகளின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தயா மாஸ்டரை, பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது. இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணை நடந்தது.
அப்போது, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் உயர் நீதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருப்பதாகவும், அவை இன்னும் திரும்பி வரவில்லை என்றும், அதனால் இந்த வழக்கை வேறு தேதிக்கு ஒத்தி வைக்குமாறு அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சசிமகேந்திரன் வழக்கை செப்டம்பர் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
தயாமாஸ்டரின் வழக்கறிஞர் சுமந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மனித உரிமைகளுக்கும் நீதி முறைகளுக்கும் முரணாக உருவாக்கப்பட்டுள்ளது பயங்கரவாதத் தடைச்சட்டம். இந்த விதிகள் கொண்டு வரப்பட்டபோது அவற்றை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தன. ஆகவே, அவற்றைப் பயன்படுத்த மாட்டோம் என முந்தைய அரசு உறுதி அளித்தது. ஆனால் இப்போதைய அரசு இந்த சட்டப்பிரிவின்படி தயா மாஸ்டர் மீது குற்றச்சாட்டு சுமத்தியிருக்கிறது. இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்” என்று தெரிவித்தார்.