புதுடெல்லி:
உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியதை அடுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆலோனை மற்றும் கண்டனத்தை தொடர்ந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார்.
காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரணைக்கேற்ற உச்ச நீதிமன்றம், ‘வாழு, வாழவிடு’ என்ற தத்துவத்தை கடைபிடிக்கவேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா டெல்லி சென்று, கர்நாடகத்துக்காக வாதாடி வரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமனைடெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், சட்ட ஆலோசகர் பிரஜீத் ஹாலப்பா, மூத்த வழக்கறிஞர்களான மோகன்காதகரி ஆகியோருடன் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடைபெற்றது.
காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்ற தமிழக மனுவுக்கு பதில் அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும், தமிழகத்துக்கு கட்டாயம் காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் நிலை ஏற்பட்டால், அதை சமாளிக்க வேண்டிய நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தற்போது கர்நாடகாவில் உள்ள காவிரி நீரி பிடிப்பு பகுதிகளில் கணமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆகவே கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி நடுவர் மன்ற ஆணைப்படி கர்நாடகா காவிரில் 50 டிஎம்சி தண்ணீர் உடனே திறந்துவிட உத்தரவிட்டால் செப்டம்பர் 3வது வாரம் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வக்கீல்களும் வாதிட்டனர். இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், வாழு வாழவிடு என நடந்து கொள்ளும்படியும், மனிதாபிமானத்தோடு தண்ணீர் விடும்படியும் கூறி வழக்கை வரும்5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். நாளை மீண்டும் வழக்கு விசாரணை தொடங்குகிறது.
இந்த விசாரணையின் முடிவில் தமிழகத்திற்கு ஓரளவு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடலாம் என தஞ்சை விவசாயிகள் கருதுகிறார்கள்.50 டிஎம்சி தமிழக அரசு கேட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே உள்ள அணைகளிலும், கபினியிலும் சேர்த்து 100 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் உள்ளது. எனவே குறைந்தபட்சம் 25 டிஎம்சி தண்ணீர் கொடுக்கும்படி உத்தரவிட்டாலும் மேட்டூர் அணை திறப்பதற்கு போதுமான தண்ணீர் வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து சம்பா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமானால் குறைந்த படசம் 90 அடி தண்ணீர் தேவை. தற்போது 37 டிஎம்சி உள்ள நிலையில் இன்னும் 15 டிஎம்சி தண்ணீர் கிடைத்தாலே நீர்மட்டம் 90 அடியை எட்டிவிடும். 90 அடி தண்ணீர் மூலம் சம்பா சாகுபடிக்கு 30 நாட்களுக்கு திறக்கலாம். அதற்குள் வடகிழக்கு பருவமழை வந்து விடும். எனவே மேட்டூர் அணை செப்டம்பர் 3வது வாரத்தில் திறக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. இன்று காலை 8 மணிக்கு மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8,033 கனஅடி தண்ணீர் வந்தது.நேற்று காலை வினாடிக்கு 10,694 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலையை விட இன்று வினாடிக்கு 2,661 கனஅடி தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 74.870 அடி. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,250 கனஅடி திறக்கப்படுகிறது.